உலகின் புதிய கடவுள்

பெப்ரவரி 1, 2007

23.ஆண்கள் படைத்த உலகை அழிப்போம்

Filed under: Culture, Feminism, Philosophy, Politics, Society — Selvan @ 8:54 பிற்பகல்

“உரிமை என்பது பிச்சையல்ல.அதை கேட்டுப் பெறாதே.எடுத்துக்கொள்” என்றார் காரல் மார்க்ஸ்.உண்மைதான்.நமக்கு சொந்தமானதை அடுத்தவன் வைத்திருந்தால் புரட்சி செய்துதான் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் வாழும் உலகம் ஆண்களால் படைக்கப்பட்ட உலகம். இந்த உலகில் வாழ பெண்களுக்கு மூச்சு திணருகிறது. நுகத்தடியில் பூட்டப்பட்ட பசுவாய் பெண்ணினம் வாடுகிறது. அதை பிணைத்திருக்கும் சங்கிலிகள் கற்பனையானவை, ஆண்களால் சுமத்தப்பட்டவை என்பதை அவ்வினம் உணர்ந்தால் அது வீறு கொண்டு எழும்.

 பெண் உடல் வலு குறைந்தவள் என்ற வாதமே தவறு. அவள் உடல் வலு குறைவாக ஆக்கப்பட்டாள் என்பது தான் உண்மை. 16 இன்ச் கர சுற்றளவுடன் ஆண் தோள் தட்டி நின்றால் “ஆகா” என மற்ற ஆண்கள் கைதட்டுவார்கள். 16 இன்ச் கரத்தை ஒரு பெண் உருவாக்கி காட்டினால் முகம் சுழிப்பார்கள். மதகுருவிலிருந்து, காதலன் வரை நாலா பக்கமும் இருந்து புத்திமதிகள் பறக்கும். பெண்கள் உருவ அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என இந்த ஆணாதிக்க சமுதாயம் விதிமுறைகளை உருவாக்கி வைத்துள்ளது. அந்த விதிகளுக்கு கட்டுப்பட்ட பெண்கள் கொடி இடையும், மெல்லிய தோள்களும் பெற மெனக் கெடுகிறார்கள். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அந்த விதிகளுக்கு கட்டுப்பட்டு பெண்ணினம் உடல் வலு குறைந்து ஆணுக்கு அடிமையாய் போய்விட்டது.

ஆணுக்கு சமமான உரிமை பெறுவது தான் பெண்ணுரிமை என்பது தவறான வாதம். எந்த ஆணுக்கு சமமான உரிமையை பெண் பெற வேண்டும்? கறுப்பின பெண்களுக்கு கறுப்பின ஆண்களுக்கு சமமான மரியாதை கொடுத்தால் அது போதுமா? கறுப்பின ஆண்களுக்கே சம மரியாதை கிடையாது. ஆக பெண்விடுதலை என்பது சமூக ஏற்றத்தாழ்வுகள் மறைந்தால் தான் காரிய சாத்தியமாகும்.

நாம் வாழும் உலகம் ஆண்களால் படைக்கப்பட்டது.கடவுளை கூட ஆணாய் கற்பனை செய்தவர்கள் தான் ஆண்கள். கடவுளின் பூமியில் அவதாரம் எடுத்தபோதும் ஆணாய் தான் பிறந்தார். கடவுளை நேரில் தரிசித்த மகான்கள் பெரும்பாலும் ஆண்கள்.  அனைத்து மத ஸ்தாபகர்களும் ஆண்கள். சட்டம் இயற்றுவோர்,மன்னர்கள் அனைவரும் ஆண்கள். இப்படி ஆண்களால் படைக்கப்பட்ட இந்த உலகில் புஜபல பராக்கிரமமே பிரதானம்.

 கொலைகள் நிரம்பிய, யுத்தமும் வன்முறையும் நிரம்பிய, பெண்ணினத்தை கீழே போட்டு மிதித்த ஒரு உலகை ஆண்கள் சிருஷ்டித்து அதில் வாழ பெண்களை வற்புறுத்துகிறார்கள். இவ்வுலகில் தொழப்படும் கடவுள் ஆண்தான்.

ஆணுக்கு பதில் பெண்கள் உலகை படைத்திருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள்.அன்பும் அருளும் நிரம்பிய உலகமாக அது இருந்திருக்கும்.அதில் போர்கள் இருந்திருக்காது. படுகொலைகள் இருந்திருகாது. தாய்மையும் அன்பும் பொங்கி வழியும் உலகமாக அது இருந்திருக்கும். அத்தகைய உலகம் இனி சாத்தியமில்லை என்றாலும் ஆண்கள் படைத்த இவ்வுலகில் வாழ்வதும் சாத்தியமில்லை. ஆண்கள் படைத்த உலகை அடியோடு அழித்துவிட்டு புதிதாக ஒரு பொன்னுலகம் படைக்கபடவேண்டியது அவசியம்.

மேற்கெங்கும் அத்தகைய உலகங்கள் வேகமாக படைக்கபடுகின்றன. அங்கே பெண் ஆணின் அடிமை அல்ல.சம உரிமை படைத்த தோழி.உலகை செதுக்கும் சிற்பியராக ஆணும் பெண்ணும் அங்கு கரம் கோர்த்து செயல்படுகின்றனர். மேற்கே சுதந்திர கதிரவன் உதித்துவிட்டான். கிழக்கேயும் அவன் கதிர்கள் பரவத் தொடங்கி விட்டன. ஆண்களால் படைக்கப்பட்ட இவ்வுலகம் அழியத் தொடங்கிவிட்டது.

தனியொருத்திக்கு உரிமை தராத இந்த ஜெகத்தை விரைந்து அழித்திடுவோம். ஆணும் பெண்ணும் சமமாய் வாழும் புதிய பொன்னுலகம் விரைவில் படைப்போம்

19.பழிவாங்கப்படும் ஓரினச் சேர்க்கையாளர்கள்

Filed under: Culture, Politics, Society — Selvan @ 8:42 பிற்பகல்

யுடா மாநிலம் 1995ல் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு முழு திருமண உரிமை அளித்தது.உடனடியாக அமெரிக்காவின் 37 மாநிலங்கள் அவசர அவசரமாக ஓரினத் திருமணங்களுக்கு அனுமதி மறுத்து டோமா( Defense of marriage act) என்ற சட்டத்தை இயற்றின.ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மட்டும்தான் திருமணம் நடக்க வேண்டும் என்ற இந்த பிற்போக்கு சட்டம் இன்னும் பல மாநிலங்களில் அமுலில் இருக்கிறது. மேற்கத்திய நாடுகள் பலவும் இதுபோல் பிற்போக்குத்தனமான சட்டங்களை ஒழித்துக் கட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஓரின உறவுகளுக்கு சட்ட பூர்வ அனுமதி பிரான்ஸ் ,ஸ்கான்டினேவியா, பிரிட்டன், நியுஸிலாந்து, செக்,நெதெர்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் வழங்கப்படுகிறது. விரைவில் இந்த நாடுகளில் ஓரினத் தம்பதிகளுக்கு முழு திருமண உரிமையும் வழங்கப்படக்கூடும். ஐரோப்பிய யூனியன் 2000 சார்ட்டரின்படி ஓரினசேர்க்கையும்,ஓரினத் திருமணமும் ஒரு மனிதனின் அடிப்படை சுதந்திரமாக அங்கீகரிக்கபட்டிருக்கிறது.

தனிமனிதனின் படுக்கையறையில் மூக்கை நுழைக்க இனி ஐரோப்பாவில் எந்த அரசுக்கும் உரிமை இல்லை. இப்படி ஐரோப்பா முன்னேற்றப் பாதையில் செல்ல அமெரிக்கா இன்னும் 19ம் நூற்றாண்டின் சட்டங்களையே வைத்துக் கொண்டு இருக்கிறது. இல்லினாய் உட்பட 15 மாநிலங்களில் ஓரினச் சேர்க்கையே தண்டிக்கபடக் கூடிய குற்றமாக இருக்கிறது. ஐரோப்பாவில் 19ம் நூறாண்டிலியே ஓரினச்சேர்க்கையை குற்றப்பட்டியலிலிருந்து எடுத்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொலராடோ 1992ல் 53% மெஜாரிடியோடு தனது ஓரின குடிமக்களுக்கு சம உரிமை வழங்கும் சட்டத்தை ரத்து செய்தது. 1999ல் மய்னும் அதே போல் ஒரு பிற்போக்கு சட்டத்தை இயற்றியது. கலிபோர்னியா போன்ற லிபெரல்கள் ஆளும் மாநிலம் கூட 2000ல் இம்மாதிரி சட்டம் போட்டது என்றால் மனித உரிமை அங்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை யூகித்துக் கொள்ளலாம்.

இதற்கெல்லாம் என்ன காரணம் என்று கேட்டால் முதலில் ஓரினச்சேர்க்கையாளர்கள் விரல் நீட்டுவது ரிபப்ளிக்கன் கட்சியைத் தான். அபார்ஷனுக்கு அனுமதி மறுப்பு,ஓரினத் திருமணத்துக்கு தடை விதிப்பு, குளோனிங் செய்யத் தடை விதிப்பு, பரிணாமவாதத்தை பள்ளிகளில் பயிற்றுவிக்க தடை விதிப்பது போன்ற பிற்போக்கு நடவடிக்கைகளை ஆதரிப்பதில் இவர்களுக்கு அவ்வளவு ஆனந்தம்.

அமெரிக்காவில் இப்படி என்றால் இந்தியாவில் நிலமை மிக கேவலமாக உள்ளது.19ம் நூற்றாண்டு பிரிட்டிஷ் சட்டங்களை வைத்துக் கொண்டு டில்லி போலிசார் சமீபத்தில் 4 ஓரினச் சேர்க்கையாளர்களை கைது செய்தனர். சில நாடுகளில் இவர்களுக்கு திருமண அனுமதியே வழங்கப்படுகிறது.சில நாடுகளில் திருமன உறவுக்கு அனுமதி இல்லையென்றாலும் ஓரினச்சேர்க்கை குற்றமல்ல. இந்தியாவில் ஓரினச்சேர்க்கையே தண்டிக்கபடக் கூடிய குற்றமாக இன்னும் இருக்கிறது. அமெரிக்க மனநல மருத்துவர் சங்கம் ஓரினச்சேர்க்கை மனநோயல்ல,வியாதியல்ல,மனிதனின் இயற்கையான பழக்கம் என்று எப்போதோ சொல்லிவிட்டது.  அமெரிக்க அரசாங்கத்தின் காதுகளிலேயே அது இன்னும் ஏறவில்லை.இந்திய அரசாங்கத்தின் காதுகளில் ஏறுவது எப்போது?

Theme: Banana Smoothie. வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Follow

Get every new post delivered to your Inbox.