உலகின் புதிய கடவுள்

பெப்ரவரி 23, 2007

30.தாயைக் காத்த வைணவர்கள்

Filed under: Culture, Philosophy, Religion — Selvan @ 4:49 மு.பகல்

விஷ்ணுவின் மற்ற எந்த அவதாரங்களையும் விட ராமாவதாரம் அதிக சர்ச்சைக்கு உட்பட்ட அவதாரமாகும்.அதிக அளவில் பட்டிமண்டபங்களில் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்ட விஷ்ணு அவதாரம் ராமாவதாரமாகத் தான் இருக்கும்.சீதையை ஏன் தீக்குளிக்க சொன்னான் ராமன் என்பது பட்டிமணடப வக்கில்கள் மட்டும் எழுப்பும் சர்ச்சையல்ல,பொதுமக்கள் துவங்கி பரமபாகவத வைணவர்கள் வரை நடக்கும் சர்ச்சையாகும். சீதை வைணவர்களுக்கு தாய் போன்றவள்.சீதையை வைஷ்ணவர்கள் அழைப்பதே தாயார் என்றுதான்.

தாயை கதாநாயகியாக்கி கதை எழுதும்போது ஒரு மகனுக்கு என்னென்ன பிரச்சனை வருமோ அதெல்லாம் ராமாயணத்தை எழுதிய வைஷ்ணவர்களுக்கும் வந்தது. மற்ற எல்லா பிரச்சனைகளையும் விட வைஷ்ணவர்களுக்கு இருந்த மிகப்பெரும் பிரச்சனை சீதையை ராவணன் தூக்கிக்கொண்டு போனது.அவள் கற்பின் மீது சந்தேகப்பட்டு ராமன் பேசியது,அவள் தீக்குளித்தது ஆகும்.தாயின் கற்பின் மீது சர்ச்சை நடப்பதை,அதுவும் வைணவர்களின் கண்கண்ட கடவுளான ராமனே அம்மாதிரி செய்ததை வைஷ்ணவர்களால் தாங்கவே முடியவில்லை.

மேலும் சீதையை ராவணன் எப்படி தொடவிடலாம்?தாயை ஒருவன் தவறான எண்ணத்தில் தொட்டான் என்பதை ராமாயணம் எழுதிய வைஷ்ணவர்களால் தாங்கவே முடியவில்லை. வால்மிகியின் மூல ராமாயணத்தில் இதை எப்படி சொல்லியிருக்கிறார் என பாருங்கள்.

வாமேன சீடாம் பட்மாக்ஸீம் மூர்தஜெஸு கரெண சக ஊர்வொடு தஷீணென ஏவ பரிஜக்ராக பாணினா டட தாம் பருஸை வாக்யை அப்கிடர்ஜ்ய மகாச்வனஅன்கென ஆதாய வைதேகீம் ரதம் ஆரோபயட் டடா

இடக்கரத்தால் தாமரைக் கண்ணினாளின் முடியையும் வலக்கரத்தால் அவள் காலையும் பற்றி அவளை இழுத்தான்.கொடுமொழிகள் பேசி அவளை மிரட்டியபடி தேரிலேற்றி கடத்திச்சென்றான்.(எனக்கே மனம் பொறாமல் வால்மிகியின் சிலவரிகளை சென்சார் செய்துவிட்டேன்)

இப்படி வால்மிகி எழுதிவைத்துவிட்டார். பிற்காலத்தில் வந்த வைஷ்ணவர்களால் அதை தாங்க முடியவில்லை.ராமாயணம் பாடும்போது இந்த இடம் வரும்போது இதை எழுதவே அவர்களுக்கு மனம் வரவில்லை.பரமபாகவதனான கம்பன் இந்த இடத்தை எப்படி கையாள்கிறான் என்று பாருங்கள்.

ஆண்டு, ஆயிடை, தீயவன் ஆயிழையைத்தீண்டான், அயன் மேல் உரை சிந்தைசெயா;தூண்தான் எனல் ஆம் உயர் தோள் வலியால்,கீண்டான் நிலம்; யோசனை கிழொடு மேல்.

“ஆயிழையைத் தீண்டான்” என எழுதுகிறார் கம்பர். சீதையை ராவணன் தொடுவதை அவர் விரும்பவே இல்லை. பர்ணசாலையை ஒரு யோசனை நிலத்தோடு சேர்த்துப் பெயர்த்து சீதையை தூக்கிக்கொண்டு போனான்,சீதையை தொடவில்லை என அழுத்தம் திருத்தமாக எழுதுகிறார்.

இவராவது பரவாயில்லை.இவருக்கு பின்வந்த வைஷ்ணவர்களால் சீதை ராவணன் வீட்டில் இருந்தாள் என்பதையே தாங்க முடியவில்லை. சீதையை ராமன் சந்தேகப்பட்டான் என எழுதவும் மனம் இடம்தரவில்லை. 15ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஆத்யாத்ம ராமாயணத்தில் ராமன் ஒரு மாயா சீதையை உருவாக்குகிறார். ராவணன் வருவது அவருக்கு தெரிந்ததும் உண்மை சீதையை அக்னியிடம் பாதுகாப்புக்காக ஒப்படைக்கிறார். நிழல் சீதையை ராவணன் தூக்கிக்கொண்டு போகிறான். பிறகு அவதார நோக்கம் நிறைவேற வேண்டும் என்பதற்காக ராமன் அழுவதுபோல் மாய விளையாட்டு காட்டுகிறார். ராவணனை கொல்கிறார். அக்னியை அழைத்து தன் மனைவியை திரும்பப்பெற்றுக்கொண்டு நிழல் சீதையை அக்னியிடம் சேர்க்கிறார்.

 16ம் நூற்றாண்டில் துளசிதாசர் இந்த முறையையே கையாள்கிறார். ஆத்யாத்ம ராமாயணம் சொல்வது போலவே இவரும் நிழல் சீதையை தான் ராவணன் கொண்டுபோனான் என எழுதுகிறார். வேதவதி என இன்னொரு பெண்ணைத்தான் ராவணன் கொண்டுபோனான் என சொல்லும் ராமாயணங்களும் உண்டு. சீதையை ராவணனின் மகளாக சொன்ன ராமாயணங்களும் உண்டு.தந்தை வீட்டில் மகள் இருப்பது தவறில்லை அல்லவா?

தாய் மீது வைஷ்ணவர்கள் கொண்ட பாசம் வால்மீகியை எடுத்து விழுங்கிவிட்டது.வால்மீகி எழுதியதை ஒப்புக்கொள்ள இவர்கள் யாரும் தயாராக இல்லை. தாய்ப்பாசத்தின் சக்தி அப்படி

26.தெய்வம் தொழா அன் மனைவி தான் தொழுவான்

Filed under: Culture, Religion, Short stories — Selvan @ 4:17 மு.பகல்

சாத்தான் மரத்தின் மீதிருந்து இனிய குரலில் பாடிக்கொண்டிருந்தான்.ஏடன் தோட்டமெங்கும் அவன் குரல் இனிமையாக ஒலித்தது.தனிமையில் நடந்து வந்துகொண்டிருந்த ஏவாளின் காதில் அது விழுந்தது. அதுவரை அவள் ஆதமின் குரலையும்,கடவுளின் குரலையும் தவிர வேறு குரலை கேட்டதில்லை.

பாடுவது யார் என்று உற்று நோக்கினாள். மரத்தின் மீது அமர்ந்து பாடிக்கொண்டிருப்பது ஒரு பாம்பு என்று தெரிந்ததும் அவள் ஆச்சரியமடைந்தாள். “யார் நீ?” என்று கேட்டாள்.

பாம்பு வடிவில் இருந்த சாத்தான் மெதுவாக கீழிறங்கினான்.”என்னோடு நீ பேசினால் கடவுளுக்கும்,உன் கணவனுக்கும் பிடிக்காது.போய்விடு” என்றான் சாத்தான்.’கடவுள் கருணையே வடிவானவர்.என் கணவர் என் மீது உயிரையே வைத்துள்ளார்.ஆக எனக்கு எந்த பிரச்சனையும் வராது.நீ யார்” என்று கேட்டாள் ஏவாள்.

“என் பெயர் லூசிபெர்.உங்கள் இருவரைபோல் கடவுளின் அன்புக்குரியவனாக முதலில் இருந்தேன்.ஆனால் போகபோக எனக்கு அது பிடிக்காமல் போய்விட்டது.என் கதையை விடு.அது ஒரு பெருங்கதை” என்று பெருமூச்சு விட்டது சாத்தான்.

ஏவாள் அதிர்ச்சி அடைந்தாள்.கடவுளை கூட ஒருவருக்கு பிடிக்காமல் போகும் என்பதை அவள் அன்று தான் கண்டாள்.ஏன் என்று தெரிந்து கொள்ள அவளுக்கு ஆவல் வந்தது. “ஏன் உனக்கு கடவுளை பிடிக்கவில்லை?” என்று கேட்டாள். “உனக்கு ஏன் கடவுளை பிடித்திருக்கிறது?” என்று திருப்பி கேட்டது சாத்தான். “எங்கள் இருவரை அவர் படைத்தார்.அன்போடு பாதுகாக்கிறார்.அவரை பிடிக்காமல் வேறு யாரை பிடிக்க வேண்டுமாம்?” என்று ஏவாள் கோபமாக கேட்டாள். “ஏன் உன் கணவனை உனக்கு பிடிக்க வேன்டாமா?” என்று திருப்பி கேட்டது சாத்தான்.

“உனக்கு கடவுளை அதிகம் பிடிக்குமா அல்லது உன் கணவனை அதிகம் பிடிக்குமா?’ “கடவுள் எனக்கு தந்தை.ஆனால் ஆதாம் என் கணவன்.எனக்கு ஆதமை தான் முதலில் பிடிக்கும்” என்றாள் ஏவாள். “உன் கணவனுக்கு யாரை முதலில் பிடிக்கும் தெரியுமா? என்று கேட்டது சாத்தான்.

 ’இதில் என்ன சந்தேகம்.என்னை தான் முதலில் பிடிக்கும்” என்றால் ஏவாள்.

“அப்பாவி பெண்ணே..” என்று சிரித்தது சாத்தான்.”நீ ஒரு முட்டாள் ” என்று சொல்லிவிட்டு மறைந்தது.

***

ஏவாள் அழுது கொண்டே இருந்தாள். சாத்தான் சொன்னதை கேட்டு கணவனிடம் சென்று உனக்கு யாரை பிடிக்கும் என்று கேட்டதற்கு அவன் கடும்கோபம் கொண்டான். கடவுளுக்கு இணையாக உன்னை கருதுகிறாயா என்று சத்தம் போட்டான். அவன் கடும்மொழி பேசி ஏவாள் இதுவரை கேட்டதே இல்லை. பாம்பையாவது பார்க்கலாம் என்று சென்றாள். பாம்பு அதே மரத்தில் உட்கார்ந்திருந்தது.

அவளின் அழுத கண்களை பார்த்ததும் என்ன நடந்திருக்கும் என்பது அதற்கு தெரிந்துவிட்டது.”இதில் வருத்தபட ஒன்றும் இல்லை” என்றது பாம்பு.”கடவுளுக்கு அடுத்துதான் அவன் உன்னை தான் விரும்புவான்.கடவுள் மேல் பக்தி கொண்ட அனைவரும் அப்படிதான் இருப்பார்கள்” என்றது பாம்பு.

“பெண்ணின் மனம் உனக்கு தெரியாது என்றாள் ஏவாள்.”என்ன தான் கடவுளே ஆனாலும் என் கணவனுக்கு என்னை தான் முதலில் பிடிக்க வேண்டும்.அந்த உரிமையை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்.ஆனால் இவன் இப்படி இருக்கிறான்.எனக்கு இது பிடிக்க வில்லை” என்றாள் ஏவாள். “அவன் அப்படி தான் சொல்வான்.ஆனால் மனதில் உன்மேல் அவனுக்கு பிரியம் இருக்கும்.நீயா கடவுளா என்று வந்தால் அவன் உன்னை தான் தேர்ந்தெடுப்பான்” என்றது சாத்தான்.

“எப்படி நம்புவது” என்று கேட்டாள் ஏவாள். ‘பரிசோதித்து பார்க்க வேண்டியது தான்” என்று சொல்லி சிரித்தது சாத்தான்.”

ஆனால் அப்படி செய்தால் இந்த இனிமையான வாழ்வு மறைந்து விடும்.துன்பம் உன் வாழ்வில் நுழையும்”

“நுழையட்டும்” என்றாள் ஏவாள்.”என்ன கஷ்டப்பட்டாலும் என் கணவன் எனக்கே சொந்தமாக இருப்பானல்லவா?அவன் என் மேல் உண்மையான் காதல் கொண்டிருக்கிறானா இல்லை அவன் தந்தையை தான் அவனுக்கு பிடிக்குமா என்று சோதித்து பார்த்துவிடுகிறேன்.இதனால் என்ன விளைவுகள் வந்தாலும் பரவாய்ல்லை” என்றாள் ஏவாள்.

****

“என்ன காரியம் செய்துவிட்டாய்” என்று பதறினான் ஆதாம்.”ஐயோ நீ அந்த பழத்தை சாப்பிட்டது தந்தைக்கு தெரிந்தால் உன்னை அழித்துவிடுவாரே.” என்று கலங்கினான்.

“நான் செத்தால் உனக்கென்ன” என்றாள் ஏவாள்.”உன் இன்னொரு விலா எலும்பின் மூலம் இன்னொரு பெண்ணை உருவாக்குவார் உன் தந்தை.அவளோடு குடும்பம் நடத்து” என்றாள் ஏவாள்.

“முட்டாளே” என்று அழுதான் ஆதாம்.”உன்னை விட்டால் எனக்கு வாழ்வு இல்லை.நீ இல்லாமல் இந்த ஏடன் தோட்டத்தில் நான் வாழ்ந்து என்ன சாதிக்கப்போகிறேன்.?” தந்தை வரும் நேரம் நெருங்கியது.ஆதாம் அந்த ஆப்பிளின் மிச்சத்தை எடுத்தான். சாப்பிட போனான்.

 ”வேண்டாம்” என்று பதறினாள் ஏவாள். “உன் காதலை நான் உணர்ந்து கொண்டேன்,இனி மகிழ்ச்சியோடு சாகிறேன்” என்றாள்.

“முட்டாள் பெண்ணே” என்றான் ஆதம்.”வாழ்வோ சாவோ அது உன்னோடு தான்.உனக்கு என்ன நடக்கிறதோ அதை நானும் அனுபவிக்கிறேன்” என்றான். ஆப்பிளை கடித்தான். பெண்ணின் முதல் புரட்சி வென்றது. காதல் சிம்மாசனமேறியது.

பெப்ரவரி 1, 2007

21.உலகசாதனை படைத்த ஆஞ்சனேயர்

Filed under: Culture, India, Light reading, Religion — Selvan @ 8:45 பிற்பகல்

1970′ல் பெங்களூர் மகாலட்சுமி லே அவுட்டில் விளையாட்டாக அந்த முயற்சி துவங்கப்பட்டது.இந்தியாவிலேயே உயரமான ஆஞ்சனேயர் சிலையை நிறுவுவதுதான் அவர்கள் நோக்கம். 20,000 ரூபாய் செலவில் மலையுச்சியில் சிலையை நிறுவினார்கள். 1976′ல் உடுப்பி,சிருங்கேரி சங்கராச்சாரியர் முன்னிலையில் பிரசன்ன வீராஞ்சனேய ஸ்வாமி சிலை நிறுவப்பட்டது. இந்தியாவிலேயே உயரமான ஆஞ்சனேயர் சிலை அதுதான் என்று சொல்லப்பட்டது.

சரியாக 6 வருடங்கள் தான் அந்த சாதனை நீடித்தது.1982′ல் இமாச்சல் பிரதேசத்தில் சின்மயானந்த ஸ்வாமிகள் அந்த சாதனையை முறியடித்து விட்டார்.30 அடி உயரத்தில் சின்மயரின் ஆஞ்சனேயர் பெங்களூர் ஆஞ்சனேயரை தோற்கடித்து விட்டார்.அதுவும் இமயமலை உச்சியில் தவக்கோல ஆஞ்சனேயரை ஸ்தாபித்து விட்டார் சின்மயானந்தர். 1987′ல் அந்த சிலை பூர்த்தியடைந்தது. கோலாகலமாக விழா எடுத்து சின்மயர் பக்தர்கள் அதை கொண்டாடினர்.  டில்லிக்காரர்கள் சும்மா விடுவார்களா? 1989ல் டில்லி பாலம் ரோட்டில் இந்தியாவிலேயே உயரமான சிலை நிறுவ திட்டம் போட்டனர்.இதற்கு ஐடியா கொடுத்தவர் ப்ரபுதத் ப்ரம்மச்சாரி எனும் முனிவர். தில்லியில் அனுமன் சிலை இல்லாததுதான் தில்லி அன்னிய படையெடுப்புக்கு ஆளாக காரணம் என்று அவர் சொன்னதும் பணம் நாலாபக்கமும் இருந்து குவிந்தது.

1300 டன் எடை கொண்ட 45 அடி கருங்கல் ஆஞ்சனேயர் மங்களூரில் இருந்து வரவழைக்கபட்டார். 1990′ல் அது டில்லி பாலம் ரோட்டில் நிறுவப்பட்டது. இனி டில்லி மீது யாரும் படைஎடுக்க முடியாது என்று ஆனந்தக் கண்ணீர் விட்டார் ப்ரபுதத் பிரம்மச்சாரி. ஆஞ்சனேயன் காவலிருக்கும் நகரை யாராவது தொட முடியுமா என்ன?

அதே வருடம் பிரம்மச்சாரியின் சாதனை முறியடிக்கப்பட்டது,1990′ல் சத்யசாய்பாபாவின் 65வது பிறந்தநாளை முன்னிட்டு 65 அடியில் கான்கிரீட் ஆஞ்சனேயர் சிலை நிறுவப்பட்டது.சஞ்சீவி மலையை கையில் ஏந்திய ஆஞ்சனேயர் அந்த விழாவுக்காக நிறுவப்பட்டார். ஆனால் கான்கிரிட் சிலை என்பதால் அது உலக சாதனையாகாது என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மேற்கு இந்திய தீவில் உள்ள 85 அடி ஆஞ்சநேயர் சிலை தான் உலகிலேயே உயரமானது என்கிறார்கள்.(பார்க்க படம்)

 தமிழ்நாடு மட்டும் சளைத்ததா என்ன?உலக சாதனை செய்யவில்லை என்றாலும் விழுப்புரத்தில் விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் 36 அடி உயரத்தில் இருக்கிறார்.சரி,நம்ம நாமக்கல்,சுசீந்திரம் ஆஞ்சனேயர் சிலை எல்லாம் எவ்வளவு உயரம்?தெரிஞ்சவங்க சொல்லுங்க.

பழைய இடுகைகள் »

Theme: Banana Smoothie. வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Follow

Get every new post delivered to your Inbox.