உலகின் புதிய கடவுள்

பெப்ரவரி 23, 2007

30.தாயைக் காத்த வைணவர்கள்

Filed under: Culture, Philosophy, Religion — Selvan @ 4:49 மு.பகல்

விஷ்ணுவின் மற்ற எந்த அவதாரங்களையும் விட ராமாவதாரம் அதிக சர்ச்சைக்கு உட்பட்ட அவதாரமாகும்.அதிக அளவில் பட்டிமண்டபங்களில் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்ட விஷ்ணு அவதாரம் ராமாவதாரமாகத் தான் இருக்கும்.சீதையை ஏன் தீக்குளிக்க சொன்னான் ராமன் என்பது பட்டிமணடப வக்கில்கள் மட்டும் எழுப்பும் சர்ச்சையல்ல,பொதுமக்கள் துவங்கி பரமபாகவத வைணவர்கள் வரை நடக்கும் சர்ச்சையாகும். சீதை வைணவர்களுக்கு தாய் போன்றவள்.சீதையை வைஷ்ணவர்கள் அழைப்பதே தாயார் என்றுதான்.

தாயை கதாநாயகியாக்கி கதை எழுதும்போது ஒரு மகனுக்கு என்னென்ன பிரச்சனை வருமோ அதெல்லாம் ராமாயணத்தை எழுதிய வைஷ்ணவர்களுக்கும் வந்தது. மற்ற எல்லா பிரச்சனைகளையும் விட வைஷ்ணவர்களுக்கு இருந்த மிகப்பெரும் பிரச்சனை சீதையை ராவணன் தூக்கிக்கொண்டு போனது.அவள் கற்பின் மீது சந்தேகப்பட்டு ராமன் பேசியது,அவள் தீக்குளித்தது ஆகும்.தாயின் கற்பின் மீது சர்ச்சை நடப்பதை,அதுவும் வைணவர்களின் கண்கண்ட கடவுளான ராமனே அம்மாதிரி செய்ததை வைஷ்ணவர்களால் தாங்கவே முடியவில்லை.

மேலும் சீதையை ராவணன் எப்படி தொடவிடலாம்?தாயை ஒருவன் தவறான எண்ணத்தில் தொட்டான் என்பதை ராமாயணம் எழுதிய வைஷ்ணவர்களால் தாங்கவே முடியவில்லை. வால்மிகியின் மூல ராமாயணத்தில் இதை எப்படி சொல்லியிருக்கிறார் என பாருங்கள்.

வாமேன சீடாம் பட்மாக்ஸீம் மூர்தஜெஸு கரெண சக ஊர்வொடு தஷீணென ஏவ பரிஜக்ராக பாணினா டட தாம் பருஸை வாக்யை அப்கிடர்ஜ்ய மகாச்வனஅன்கென ஆதாய வைதேகீம் ரதம் ஆரோபயட் டடா

இடக்கரத்தால் தாமரைக் கண்ணினாளின் முடியையும் வலக்கரத்தால் அவள் காலையும் பற்றி அவளை இழுத்தான்.கொடுமொழிகள் பேசி அவளை மிரட்டியபடி தேரிலேற்றி கடத்திச்சென்றான்.(எனக்கே மனம் பொறாமல் வால்மிகியின் சிலவரிகளை சென்சார் செய்துவிட்டேன்)

இப்படி வால்மிகி எழுதிவைத்துவிட்டார். பிற்காலத்தில் வந்த வைஷ்ணவர்களால் அதை தாங்க முடியவில்லை.ராமாயணம் பாடும்போது இந்த இடம் வரும்போது இதை எழுதவே அவர்களுக்கு மனம் வரவில்லை.பரமபாகவதனான கம்பன் இந்த இடத்தை எப்படி கையாள்கிறான் என்று பாருங்கள்.

ஆண்டு, ஆயிடை, தீயவன் ஆயிழையைத்தீண்டான், அயன் மேல் உரை சிந்தைசெயா;தூண்தான் எனல் ஆம் உயர் தோள் வலியால்,கீண்டான் நிலம்; யோசனை கிழொடு மேல்.

“ஆயிழையைத் தீண்டான்” என எழுதுகிறார் கம்பர். சீதையை ராவணன் தொடுவதை அவர் விரும்பவே இல்லை. பர்ணசாலையை ஒரு யோசனை நிலத்தோடு சேர்த்துப் பெயர்த்து சீதையை தூக்கிக்கொண்டு போனான்,சீதையை தொடவில்லை என அழுத்தம் திருத்தமாக எழுதுகிறார்.

இவராவது பரவாயில்லை.இவருக்கு பின்வந்த வைஷ்ணவர்களால் சீதை ராவணன் வீட்டில் இருந்தாள் என்பதையே தாங்க முடியவில்லை. சீதையை ராமன் சந்தேகப்பட்டான் என எழுதவும் மனம் இடம்தரவில்லை. 15ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஆத்யாத்ம ராமாயணத்தில் ராமன் ஒரு மாயா சீதையை உருவாக்குகிறார். ராவணன் வருவது அவருக்கு தெரிந்ததும் உண்மை சீதையை அக்னியிடம் பாதுகாப்புக்காக ஒப்படைக்கிறார். நிழல் சீதையை ராவணன் தூக்கிக்கொண்டு போகிறான். பிறகு அவதார நோக்கம் நிறைவேற வேண்டும் என்பதற்காக ராமன் அழுவதுபோல் மாய விளையாட்டு காட்டுகிறார். ராவணனை கொல்கிறார். அக்னியை அழைத்து தன் மனைவியை திரும்பப்பெற்றுக்கொண்டு நிழல் சீதையை அக்னியிடம் சேர்க்கிறார்.

 16ம் நூற்றாண்டில் துளசிதாசர் இந்த முறையையே கையாள்கிறார். ஆத்யாத்ம ராமாயணம் சொல்வது போலவே இவரும் நிழல் சீதையை தான் ராவணன் கொண்டுபோனான் என எழுதுகிறார். வேதவதி என இன்னொரு பெண்ணைத்தான் ராவணன் கொண்டுபோனான் என சொல்லும் ராமாயணங்களும் உண்டு. சீதையை ராவணனின் மகளாக சொன்ன ராமாயணங்களும் உண்டு.தந்தை வீட்டில் மகள் இருப்பது தவறில்லை அல்லவா?

தாய் மீது வைஷ்ணவர்கள் கொண்ட பாசம் வால்மீகியை எடுத்து விழுங்கிவிட்டது.வால்மீகி எழுதியதை ஒப்புக்கொள்ள இவர்கள் யாரும் தயாராக இல்லை. தாய்ப்பாசத்தின் சக்தி அப்படி

27.நிலாச்சாரலில் நகல் மனிதர்கள்

Filed under: Philosophy — Selvan @ 4:18 மு.பகல்

நிலாச்சாரலில் என்னுடைய நகல் மனிதர்கள் என்ற படைப்பு வெளியாகியுள்ளது.பின்நவீனத்துவ தொடரில் ஒருபகுதியாக அதை எழுத திட்டமிட்டிருந்தேன்.ஆனால் என் பிளாக்கை விட பலமடங்கு அதிக வாசகர் வட்டம் பெற்ற ஒரு பத்திரிக்கைக்கு அனுப்பினால் பொருத்தமாக இருக்கும் என்பதால் நிலாச்சாரலுக்கு அக்கட்டுரையை ஜெராக்ஸ் மனிதர்கள் என்ற தலைப்பில் அனுப்பினேன்.அதை அழகிய தமிழில் நகல் மனிதர்கள் என மாற்றி, கட்டுரையில் பிழை திருத்தம் செய்து யுனிகோடில் இருந்ததை திஸ்கியில் மாற்றி வெளியிட்ட நிலாராஜ் அவர்களுக்கும் நிலாச்சாரல் குழுவுக்கும் என் நன்றி.பின்நவீனத்துவ தொடரை தொடர்ந்து படிப்போர் நிலாச்சாரலுக்கு விஜயம் செய்து அக்கட்டுரையை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் இதுவரை என் படைப்புக்கள் திண்ணை,தமிழோவியம் ஆகியவற்றில் வந்திருக்கின்றன.

பெப்ரவரி 1, 2007

23.ஆண்கள் படைத்த உலகை அழிப்போம்

Filed under: Culture, Feminism, Philosophy, Politics, Society — Selvan @ 8:54 பிற்பகல்

“உரிமை என்பது பிச்சையல்ல.அதை கேட்டுப் பெறாதே.எடுத்துக்கொள்” என்றார் காரல் மார்க்ஸ்.உண்மைதான்.நமக்கு சொந்தமானதை அடுத்தவன் வைத்திருந்தால் புரட்சி செய்துதான் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் வாழும் உலகம் ஆண்களால் படைக்கப்பட்ட உலகம். இந்த உலகில் வாழ பெண்களுக்கு மூச்சு திணருகிறது. நுகத்தடியில் பூட்டப்பட்ட பசுவாய் பெண்ணினம் வாடுகிறது. அதை பிணைத்திருக்கும் சங்கிலிகள் கற்பனையானவை, ஆண்களால் சுமத்தப்பட்டவை என்பதை அவ்வினம் உணர்ந்தால் அது வீறு கொண்டு எழும்.

 பெண் உடல் வலு குறைந்தவள் என்ற வாதமே தவறு. அவள் உடல் வலு குறைவாக ஆக்கப்பட்டாள் என்பது தான் உண்மை. 16 இன்ச் கர சுற்றளவுடன் ஆண் தோள் தட்டி நின்றால் “ஆகா” என மற்ற ஆண்கள் கைதட்டுவார்கள். 16 இன்ச் கரத்தை ஒரு பெண் உருவாக்கி காட்டினால் முகம் சுழிப்பார்கள். மதகுருவிலிருந்து, காதலன் வரை நாலா பக்கமும் இருந்து புத்திமதிகள் பறக்கும். பெண்கள் உருவ அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என இந்த ஆணாதிக்க சமுதாயம் விதிமுறைகளை உருவாக்கி வைத்துள்ளது. அந்த விதிகளுக்கு கட்டுப்பட்ட பெண்கள் கொடி இடையும், மெல்லிய தோள்களும் பெற மெனக் கெடுகிறார்கள். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அந்த விதிகளுக்கு கட்டுப்பட்டு பெண்ணினம் உடல் வலு குறைந்து ஆணுக்கு அடிமையாய் போய்விட்டது.

ஆணுக்கு சமமான உரிமை பெறுவது தான் பெண்ணுரிமை என்பது தவறான வாதம். எந்த ஆணுக்கு சமமான உரிமையை பெண் பெற வேண்டும்? கறுப்பின பெண்களுக்கு கறுப்பின ஆண்களுக்கு சமமான மரியாதை கொடுத்தால் அது போதுமா? கறுப்பின ஆண்களுக்கே சம மரியாதை கிடையாது. ஆக பெண்விடுதலை என்பது சமூக ஏற்றத்தாழ்வுகள் மறைந்தால் தான் காரிய சாத்தியமாகும்.

நாம் வாழும் உலகம் ஆண்களால் படைக்கப்பட்டது.கடவுளை கூட ஆணாய் கற்பனை செய்தவர்கள் தான் ஆண்கள். கடவுளின் பூமியில் அவதாரம் எடுத்தபோதும் ஆணாய் தான் பிறந்தார். கடவுளை நேரில் தரிசித்த மகான்கள் பெரும்பாலும் ஆண்கள்.  அனைத்து மத ஸ்தாபகர்களும் ஆண்கள். சட்டம் இயற்றுவோர்,மன்னர்கள் அனைவரும் ஆண்கள். இப்படி ஆண்களால் படைக்கப்பட்ட இந்த உலகில் புஜபல பராக்கிரமமே பிரதானம்.

 கொலைகள் நிரம்பிய, யுத்தமும் வன்முறையும் நிரம்பிய, பெண்ணினத்தை கீழே போட்டு மிதித்த ஒரு உலகை ஆண்கள் சிருஷ்டித்து அதில் வாழ பெண்களை வற்புறுத்துகிறார்கள். இவ்வுலகில் தொழப்படும் கடவுள் ஆண்தான்.

ஆணுக்கு பதில் பெண்கள் உலகை படைத்திருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள்.அன்பும் அருளும் நிரம்பிய உலகமாக அது இருந்திருக்கும்.அதில் போர்கள் இருந்திருக்காது. படுகொலைகள் இருந்திருகாது. தாய்மையும் அன்பும் பொங்கி வழியும் உலகமாக அது இருந்திருக்கும். அத்தகைய உலகம் இனி சாத்தியமில்லை என்றாலும் ஆண்கள் படைத்த இவ்வுலகில் வாழ்வதும் சாத்தியமில்லை. ஆண்கள் படைத்த உலகை அடியோடு அழித்துவிட்டு புதிதாக ஒரு பொன்னுலகம் படைக்கபடவேண்டியது அவசியம்.

மேற்கெங்கும் அத்தகைய உலகங்கள் வேகமாக படைக்கபடுகின்றன. அங்கே பெண் ஆணின் அடிமை அல்ல.சம உரிமை படைத்த தோழி.உலகை செதுக்கும் சிற்பியராக ஆணும் பெண்ணும் அங்கு கரம் கோர்த்து செயல்படுகின்றனர். மேற்கே சுதந்திர கதிரவன் உதித்துவிட்டான். கிழக்கேயும் அவன் கதிர்கள் பரவத் தொடங்கி விட்டன. ஆண்களால் படைக்கப்பட்ட இவ்வுலகம் அழியத் தொடங்கிவிட்டது.

தனியொருத்திக்கு உரிமை தராத இந்த ஜெகத்தை விரைந்து அழித்திடுவோம். ஆணும் பெண்ணும் சமமாய் வாழும் புதிய பொன்னுலகம் விரைவில் படைப்போம்

பழைய இடுகைகள் »

Theme: Banana Smoothie. வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Follow

Get every new post delivered to your Inbox.