1970′ல் பெங்களூர் மகாலட்சுமி லே அவுட்டில் விளையாட்டாக அந்த முயற்சி துவங்கப்பட்டது.இந்தியாவிலேயே உயரமான ஆஞ்சனேயர் சிலையை நிறுவுவதுதான் அவர்கள் நோக்கம். 20,000 ரூபாய் செலவில் மலையுச்சியில் சிலையை நிறுவினார்கள். 1976′ல் உடுப்பி,சிருங்கேரி சங்கராச்சாரியர் முன்னிலையில் பிரசன்ன வீராஞ்சனேய ஸ்வாமி சிலை நிறுவப்பட்டது. இந்தியாவிலேயே உயரமான ஆஞ்சனேயர் சிலை அதுதான் என்று சொல்லப்பட்டது.
சரியாக 6 வருடங்கள் தான் அந்த சாதனை நீடித்தது.1982′ல் இமாச்சல் பிரதேசத்தில் சின்மயானந்த ஸ்வாமிகள் அந்த சாதனையை முறியடித்து விட்டார்.30 அடி உயரத்தில் சின்மயரின் ஆஞ்சனேயர் பெங்களூர் ஆஞ்சனேயரை தோற்கடித்து விட்டார்.அதுவும் இமயமலை உச்சியில் தவக்கோல ஆஞ்சனேயரை ஸ்தாபித்து விட்டார் சின்மயானந்தர். 1987′ல் அந்த சிலை பூர்த்தியடைந்தது. கோலாகலமாக விழா எடுத்து சின்மயர் பக்தர்கள் அதை கொண்டாடினர். டில்லிக்காரர்கள் சும்மா விடுவார்களா? 1989ல் டில்லி பாலம் ரோட்டில் இந்தியாவிலேயே உயரமான சிலை நிறுவ திட்டம் போட்டனர்.இதற்கு ஐடியா கொடுத்தவர் ப்ரபுதத் ப்ரம்மச்சாரி எனும் முனிவர். தில்லியில் அனுமன் சிலை இல்லாததுதான் தில்லி அன்னிய படையெடுப்புக்கு ஆளாக காரணம் என்று அவர் சொன்னதும் பணம் நாலாபக்கமும் இருந்து குவிந்தது.
1300 டன் எடை கொண்ட 45 அடி கருங்கல் ஆஞ்சனேயர் மங்களூரில் இருந்து வரவழைக்கபட்டார். 1990′ல் அது டில்லி பாலம் ரோட்டில் நிறுவப்பட்டது. இனி டில்லி மீது யாரும் படைஎடுக்க முடியாது என்று ஆனந்தக் கண்ணீர் விட்டார் ப்ரபுதத் பிரம்மச்சாரி. ஆஞ்சனேயன் காவலிருக்கும் நகரை யாராவது தொட முடியுமா என்ன?
அதே வருடம் பிரம்மச்சாரியின் சாதனை முறியடிக்கப்பட்டது,1990′ல் சத்யசாய்பாபாவின் 65வது பிறந்தநாளை முன்னிட்டு 65 அடியில் கான்கிரீட் ஆஞ்சனேயர் சிலை நிறுவப்பட்டது.சஞ்சீவி மலையை கையில் ஏந்திய ஆஞ்சனேயர் அந்த விழாவுக்காக நிறுவப்பட்டார். ஆனால் கான்கிரிட் சிலை என்பதால் அது உலக சாதனையாகாது என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மேற்கு இந்திய தீவில் உள்ள 85 அடி ஆஞ்சநேயர் சிலை தான் உலகிலேயே உயரமானது என்கிறார்கள்.(பார்க்க படம்)
தமிழ்நாடு மட்டும் சளைத்ததா என்ன?உலக சாதனை செய்யவில்லை என்றாலும் விழுப்புரத்தில் விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் 36 அடி உயரத்தில் இருக்கிறார்.சரி,நம்ம நாமக்கல்,சுசீந்திரம் ஆஞ்சனேயர் சிலை எல்லாம் எவ்வளவு உயரம்?தெரிஞ்சவங்க சொல்லுங்க.
