உலகின் புதிய கடவுள்

ஆகஸ்ட் 31, 2007

Peace of Civilizations

Filed under: கட்டுரை, தமிழ்ப்பதிவுகள், பொது — Selvan @ 12:42 மு.பகல்

Peace of Civilizations

ராபின்சன் க்ரூசோ (1997) என்ற திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன்.நாவலுக்கும் இதற்கும் தான் எத்தனை வித்தியாசம்?

டேனியல் ஃடீபோவின் ராபின்சன் க்ரூசோ (1719) நாவல் வெள்ளை இனம் உலக ஆதிக்கம் பெற துவங்கியிருந்த கால கட்டத்தில் எழுதப்பட்ட நாவல்.ராணுவம், கலாச்சாரம்,விஞ்ஞானம் என அனைத்து துறைகளிலும் பிரிட்டன் கொடிகட்டி பறந்த காலம்.உலகெங்கும் சென்று தேசங்களை பிடித்து, மற்ற இனங்களையும், கலாச்சாரங்களையும் வென்று அதன் வளங்களை பிரிட்டனின் நலனுக்கு பயன்படுத்தும் மனோபாவம் நிலவிய காலம்.

அந்த காலக்கட்டத்தில் எழுதப்பட்ட புகழ்மிக்க நாவல் ராபின்சன் க்ரூசோ (1719). இதை டேனியல் டிஃபோ எழுதியபோது பைபிளுக்கு அடுத்து உலகெங்கும் அதிகம் அச்சிடப்பட்ட புத்தகமாக இது விளங்கியது.ஆங்கிலத்தின் முதல் நாவல் என்று இதை சொல்வார்கள்.வெளிவந்த உடனே மாபெரும் ஹிட் ஆகிய இந்த புத்தகம் 19ம் நூற்றாண்டின் இறுதியில் உலகின் பெரும்பாலான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு விட்டது.ஆங்கில இலக்கியத்தை உலகெங்கும் கொண்டு சேர்த்த பெருமை இப்புத்தகத்துக்கு உண்டு.கிட்டத்தட்ட கல்ட் ஸ்டேடசை அடைந்த இப்புத்தகம் ஏராளமான திரைப்படங்களையும், நாவல்களையும் ( எ.கா: ஸ்விஸ் பேமிலி ராபின்சன்) உருவாக்கியது.

ராபின்சன் க்ரூசோ நாவலில், ஆபிரிக்காவிலிருந்து அடிமைகளை கொண்டுவரும் பயணத்தில் இறங்கும் ராபின்சன் க்ரூசோ அந்த கப்பல் விபத்தில் சிக்கியதால் ஒரு தீவில் 28 ஆண்டுகள் வசிக்கிறான். தீவில் அவனுக்கு அதீத மதப்பற்று வந்துவிடுகிறது. ப்ரைடே என்ற மனித மாமிசம் தின்னும் ‘காட்டுமிராண்டியை’ காப்பாற்றி அவனுக்கு ஆங்கிலமும்,’ நாகரிகமும்’ கற்றுத்தந்து அவனை கடவுளின் பாதைக்கு திருப்புகிறான். பிறகு 28 ஆண்டுகள் கழித்து ப்ரைடேவின் உதவியுடன் தப்பி ஊர் திரும்புகிறான்.

டீஃபோவின் க்ரூசோவுக்கு அடிமைகள் வைத்திருப்பது சரியேன்ற காலனிய மனப்போக்கு இருந்தது.க்ரூசோ நாவலை ஆராய்ந்த காரல் மார்க்ஸ் ‘அந்த தீவில் க்ரூசோவிடம ஏராளமாக பணமும்,தங்கமும் இருந்த்ன.ஆனால் க்ரூசோவுக்கு பணத்தை விட அடிமைகளே தேவைப்பட்டனர். பணத்தை சுரண்டுவதை விட மனித வளத்தை சுரண்டுவதிலேயே லாபம் அதிகம் என்பதை முதலாளித்துவம் உணர்ந்த தருணத்துக்கு உதாரணமாக’ இதை மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.அதேபோல் க்ரூசோ ஒரு ‘காட்டுமிராண்டியை’ பிடித்து அவனை ‘நாகரீகப்படுத்தி’ தனக்கு அடிமையாக்கி கொள்கிறான்.அதனால் இது பிரிட்டானியரின் காலனிய மனப்போக்கையும், ஒரே தீவில் வசிக்கும் வெறும் இரு மனிதர்களுக்கிடையே கூட வர்க்க பேதம் நிலவுவதையும்’ காட்டுவதாக எழுதுகிறார்.

பியர்ஸ் பிராஸ்னன் நடித்த ராபின்சன் க்ரூசோ (1997) இந்த காலனிய மனபோக்கை தகர்த்து எறிகிறது.ப்ரைடேவை சந்திக்கும் முன் க்ரூசோ காலனியவாதியாகவும், இனவாதியாகவும், மதவாதியாகவும் இருக்கிறான்.ப்ரைடேவை சந்திக்குமுன் “ஏன் இந்த தீவில் என்னை மாட்டிவிட்டாய் கடவுளே” என கேட்கிறான்.அந்த தீவின் தனிமையை எதிர்கொள்ள அவனுக்கு இறைவனின் துணை தேவைப்படுகிறது.மதப்பற்று அவ்வளவு இல்லாத க்ரூசோ அதன்பின் மதப்பற்று கொள்கிறான். ப்ரைடேவை சந்தித்தபின் அவனை “இறைவனின் வழிக்கு” கொண்டுவரவே தன்னை இறைவன் இந்த தீவுக்கு கொண்டுவந்து சேர்த்ததாக கூட நம்புகிறான். ப்ரைடேவை “heathen” என கூட ஒருதரம் விளிக்கிறான் க்ரூசோ.

காட்டுமிராண்டியான ப்ரைடேவை அடிமைப்படுத்தும் பணி அடுத்து துவங்குகிறது.ப்ரைடேவை சங்கிலியால் கட்டிபோடுகிறான் க்ரூசோ.தன்னை அவன் “மாஸ்டர்” என அழைக்க வேண்டும் என்கிறான்.”மாஸ்டர்” என்றால் என்ன பொருள் என புரியாத ப்ரைடே அவனை மாஸ்டர் என அழைக்கிறான்.ப்ரைடேவுக்கு ஆங்கிலம் கற்றுதரும் பணி அடுத்து துவங்குகிறது.ஆங்கிலம் கற்று கொடுத்த பின் அடுத்து இறைவனை அறிமுகப்படுத்தும் பணி துவங்க வேண்டாமா?

“உன் கடவுள் யார்?” என ப்ரைடேவிடம் வினவுகிறான் க்ரூசோ.

“என் கடவுள் மகாயா எனும் முதலை” என ப்ரைடே பெருமிதத்துடன் கூறுகிறான்.”மகாயா வெறும் முதலை. உன் கடவுள் கர்த்தரே” என க்ரூசோ பதிலுரைக்க ப்ரைடே ஆவேசத்துடன் அதை மறுக்கிறான்.”மாகாயாவை என்னால் காட்ட முடியும்.உன் கடவுளை உன்னால் காட்ட முடியுமா?” என ப்ரைடே கேட்கிறான். க்ரூசோ அவனுக்கு பைபிளை தர, அதில் சில பக்கங்களை தெரியாமல் கிழித்து விடுகிறான் ப்ரைடே. ஆத்திரமடைந்த க்ரூசோ அவனுடன் சண்டை பிடிக்க ப்ரைடே கோபத்துடன் வெளியேறுகிறான்.

மார்க்சின் அதே வரிகளை க்ரூசோ உச்ச்ரிக்கிறான்.”ஒரே தீவில் வசிக்கும் இருவரிடயே கூட மதசண்டையா?” என்று.ப்ரைடேவிடம் சென்று மன்னிப்பு கேட்டு இருவரும் மீண்டும் நண்பர்களாகின்றனர். க்ரூசோவின் நாய் இறந்து விடுகிறது. அதற்காக பிரார்த்திக்காமல் அழுகிறான் க்ரூசோ.”நாய்க்காக உன் கடவுளிடம் பிரார்த்தனை செய்” என்கிறான் பிரைடே.”நாய்க்கு ஆத்மா இல்லை.மனிதனுக்குதான் ஆத்மா உண்டு” என்கிறான் க்ரூசோ

அதை மறுதலிக்கும் ப்ரைடே மகாயாவிடம் நாயின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறான். க்ரூசோவின் மனம் மாறுகிறது.

“இறைவனை அடைய ஒரே வழி தான் உண்டென நம்பியிருந்தேன்.இப்போது அந்த நம்பிக்கக என்னிடமிருந்து விடை பெற்று சென்றுவிட்டது” என எழுதுகிறான் க்ரூசோ.

கடைசியில் ப்ரைடேவின் ‘காட்டுமிராண்டி’ இனத்தின் நடுவே மாட்டிகொள்கிறான் க்ரூசோ.அவனை கொல்ல அந்த இனத்தவர் முற்படுகின்றனர்.”வெள்ளையர் என் கிராமத்தை தாக்கி என் மனைவியை கற்பழித்து என் மகனை அடிமையாக கொண்டு சென்றுவிட்டனர்.அதனால் தான் கிராம மக்கள் உன்னை கொல்ல முற்படுகின்றனர்” என்கிறான் பிரைடே. க்ரூசோ கொல்லப்படவிருக்கும் தருணத்தில் பிரைடேவை சுட்டுகொன்று, க்ரூசோவை விடுவிக்கும் வெள்ளையர் அந்த காட்டுமிராண்டி கும்பலை விட மோசமாக நடந்து கொள்கின்றனர். அந்த கிராமம் முழுவதையும் தீக்கிரையாக்கி சங்கிலி கட்டி அந்த மக்களை அடிமைகளாக இழுத்து செல்கின்றனர்.பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கின்றனர்.

அந்த காட்டுமிராண்டி இனத்தை விட தன் இனம் எந்த விதத்திலும் மேம்பட்டதல்ல, அவன் நாகரீகத்தை விட தன் நாகரிகம் எந்த விதத்திலும் உயர்ந்ததல்ல என அறிகிறான் க்ரூசோ. அவனது இனவாதமும், மதவாதமும்,காலனியவாதமும் அத்துடன் அழிந்துவிடுகிறது.புத்தம்புது மனிதனாக இங்கிலாந்துக்கு திரும்புகிறான் க்ரூசோ.தன் காதலியை திருமணம் செய்துகொண்டு புதுவாழ்வை துவக்குகிறான்.

நாவலை ஒப்பிடுகையில், ப்ரைடே திரைப்படத்தில் எழுச்சி அடைந்த கறுப்பினத்தின் குறியீடாக இருக்கிறான்.”நான் உனக்கு அடிமையாக இருக்க மாட்டேன்” என தெளிவாக க்ரூசோவிடம் சொல்கிறான். க்ரூசோவுக்கு சரிக்கு சரி சமமான ந்ண்பனாகத்தான் இருக்க விரும்புகிறான். கடைசிவரை முதலை கடவுள் மீது வைத்த அன்பை அவன் மாற்றி கொள்வதில்லை. க்ரூசோவை “மாஸ்டர்” என அழைக்க மறுக்கிறான். கடைசிவரை அவன் க்ரூசோவின் கலாச்சார உடைகளை (பேண்ட்,ஷர்ட்) அணிந்து கொள்வதில்லை. சாகும் கடைசி நிமிடத்திலும் ஆதிவாசி உடைகளையே அணிந்து முகத்தில் பெயிண்டு அடித்துகொள்கிறான்.

ராபின்சன் க்ரூசோ (1719) நாவலில் க்ரூசோவை சந்திக்கும் ப்ரைடே அவன் காலை எடுத்து தனது தலையில் வைத்து கொள்கிறான்.ராபின்சன் க்ரூசோ’ல் (1997) ப்ரைடே க்ரூசோவின் காலை எடுத்து தலையில் வைப்பது போல் நடித்து அவனை கீழே தள்ளுகிறான்.

ராபின்சன் க்ரூசோ (1719) எழுச்சி அடைந்த வெள்ளை இனத்தின் குறியீடு என்றால் ராபின்சன் க்ரூசோ (1997) மனம் திருந்திய வெள்ளை இனத்தின் குறியீடு. ராபின்சன் க்ரூசோ (1997) இரு மனிதர்களின் கதை அல்ல. புதிய பொன்னுலகை உருவாக்க விழையும் இரு இனங்களின் கதை.

Theme: Banana Smoothie. வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Follow

Get every new post delivered to your Inbox.