ஒரு நிமிடம் தான் சந்துரு திகைத்தான்.அடுத்த நிமிடம் இயல்பு நிலைக்கு வந்துவிட்டான்.இளங்கோ இன்னும் அதிர்ச்சியிலேயே இருந்தார்.சந்துரு அவரை தேற்ற வேண்டியதாக போனது.
“இவன் புளுகுகிறான்” என்றான் சந்துரு.”சூரியன் மேற்கே உதிக்கும் என்றால் கூட நம்புவேன்.என் மனைவியை பற்றி யார் சொன்னாலும் நம்பமாட்டேன்” என்றான் சந்துரு.
“கோவலனை பற்றி கண்ணகி இப்படித்தான் நம்பிக்கை வைத்திருந்திருப்பாள்” என்றார் பிட்சு.”சொல்லி திருந்தாத ஜென்மம் நீ.எனக்கென்ன எக்கேடோ கெட்டு ஒழி” என்றார் பிட்சு.
“இவன் சொல்லுவது பொய்யாக இருக்கும் என எப்படி சொல்லுகிறீர்கள்?உங்கள் மனைவி உங்கள் மீது அத்தனை அன்பு வைத்திருந்தால் ஏன் இத்தனை நாளாக உங்களை தொடர்பு கொள்ளவில்லை?ஏன் அந்த சங்கத்தில் சேர்ந்தார்?ஏன் கொரியா போனார்?” என கேட்டார் இளங்கோ.
“அவளாக போயிருக்க மாட்டாள்.இந்த சண்டாளர்கள் கடத்திக்கொண்டு போயிருக்கிறார்கள்” என்றான் சந்துரு.
“அட பாவமே” என சிரித்தார் பிட்சு.”உன் மனைவி என்ன உலக அழகி ஐஸ்வர்யா ராயா,கார் வைத்து கடத்திக்கொண்டு போக?அசோகவனத்து சீதை மாதிரி நீ வருவாய் என கண்ணீரோடு காத்துக்கொண்டிருக்கிறாள் என நினைக்கிறாயாக்கும்?நெனப்பு தான் பொழப்பை கெடுக்குமாம்” என்றார் பிட்சு.
”உன்னை இதுவரை நான் அடிக்கவில்லை என்பதால் எப்போதும் அடிக்கமாட்டேன் என நினைத்துக் கொள்ளாதே” என எச்சரித்தான் சந்துரு.
“நீ மீசை வைத்த ஆண்பிள்ளை என்றால் கட்டை கழற்றி விட்டு அடி பார்க்கலாம்.” என்றார் பிட்சு.
“மீசையை நாளை எடுத்துவிடுகிறேன்.திருப்தியா?” என்றான் சந்துரு.
—–
மும்பை நகர எல்லையை தாண்டி அகமதாபாத் சாலையில் கார் விரைந்தது.மனோரி அருகே ஒதுக்குபுறமாக வண்டியை நிறுத்தினார்கள்.சாப்பிட்டுக்கொண்டே என்ன செய்வது என ஆலோசித்தார்கள்.
“என் மனைவியும்,உங்கள் மகளும் கொரியாவில் இருக்கின்றனரா,இல்லை இந்த மொட்டையன் வழக்கம் போல் பொய் சொல்லியிருக்கிறானா என்பதை கண்டுபிடிக்க வேண்டும்” என்றான் சந்துரு.
“அடேய் பிட்சு அவர்கள் இருவரும் கொரியாவில் தான் இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரம் என்ன? என்றான்.
“என் வார்த்தை தான் ஆதாரம்.நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம்” என்றார் பிட்சு.
”சரி…சங்க உறுப்பினர்களை எப்படி கொரியாவுக்கு அனுப்புவீர்கள்?” என கேட்டார் இளங்கோ.
“ஒரிசாவில் உள்ள எங்கள் கிளைக்கு அனுப்புவோம்.அங்கிருந்து மாதம் ஒரு முறை ஸ்பெஷலாக தனி விமானம் வந்து அவர்களை கொரியாவுக்கு கூட்டிப்போகும்” என்றார் பிட்சு.
“நீங்கள் கேட்காமலேயே ஒரு தகவலையும் சொல்கிறேன்.சேட்டு மகள் மீரா தற்போது ஒரிசாவில் தான் இருக்கிறாள்.அடுத்த வாரம் கொரியா அனுப்புகிறோம்” என்றார் பிட்சு.
“இத்தனை தகவல்கள் சொன்ன நீ அவரை மீட்பது எப்படி என்றும் சொல்லலாமே?உனக்கு புண்ணியமா போகும்” என்றார் இளங்கோ.
“இயந்திர துப்பாக்கிகளுடன் 20 பிட்சுக்கள் அங்கு இருக்கிறார்கள்.என்னை விட கராத்தே தெரிந்தவர்கள்.உள்ளூர் போலிஸுக்கு கணிசமான மாமூல் போயிவிடும்.ஒரிசா மந்திரி ஒருவரே எங்கள் சங்க உறுப்பினர்.இதற்கு மேல் என்ன செய்வது என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்” என்றார் பிட்சு.
“சரி கிளம்புவோம்” என்றான் சந்துரு. “
எங்கே?” என புரியாமல் கேட்டார் பிட்சு.
—–
மாருதி காரிலேயே சுந்தர்கர் போய் சேர்ந்தார்கள்.சுந்தர்கர் ஒரிசா,ஜார்கண்ட் எல்லையில் உள்ள பகுதி.பெரிய நகரமும் கிடையாது.சுந்தர்கரிலிருந்து கோயில் இருக்கும் தல்சாராவுக்கு செல்லும் ரோடு படுமோசமாக இருந்தது.கோயில் ஒதுக்குப்புறமாக காட்டில் இருந்தது.உள்ளூர் மக்கள் யாரும் அங்கு வருவதில்லை.அப்படி ஒரு கோயில் இருக்கு என்பதே அவர்களுக்கு தெரியுமா என்பது சந்தேகமாக இருந்தது. போலிசுக்கு பயந்து பதுங்கி பதுங்கி வந்ததில் பிரயாணத்துக்கே ஐந்து நாள் ஆகிவிட்டது.
நாளை மறுநாள் விமானம் வரும் என பிட்சு சொன்னார்.ஏதேனும் செய்வதென்றால் இன்னும் 30 மணிநேரத்துக்குள் செய்ய வேண்டும். என்ன செய்வது என யோசித்து,யோசித்தே இரவும் பாதிநாளும் போய்விட்டது.பிட்சு வேறு அடிக்கடி எரிச்சலை கிளப்பும் வகையில் பேசிவந்தார்.
சாயந்திரம் 3 மணிக்கு தான் சந்துருவுக்கு அந்த ஐடியா வந்தது. “தற்கொலை படை போல் உள்ளே போய் சண்டை பிடிக்க வேண்டும்.குறைந்தது 10 பேரையாவது வெட்டி போட்டு சாகவேண்டும்”
“உனக்கு மறை கழண்டிருக்கிறது” என சொன்னார் பிட்சு.”யார் பக்கத்திலும் நீ போகவே முடியாது.இயந்திர துப்பாக்கி வைத்திருக்கிறார்கள்.நீ என்ன ஆயுதம் வைத்திருக்கிறாய்?” என கேட்டார் பிட்சு. பேனாகத்தி தான் அவர்களிடம் இருந்த ஒரே ஆயுதம்.
தல்சாரா போய் ஏதாவது ஆயுதம் கிடைத்தால் வாங்கிவருகிறேன் என கிளம்பிபோனார் இளங்கோ.5 மணி சுமாருக்கு நாலைந்து கோடாரிகளுடனும்,நீள கத்திகளுடனும்,அரிவாள்களுடனும் வந்தார்.
“இதை வைத்து சவரம் செய்யத்தான் முடியும்” என்றார் பிட்சு.”அடேய் மாக்கான்களா.ஏண்டா இப்படி வெறி பிடித்து அலைகிறீர்கள்?கோயில் காம்பவுண்டையே உங்களால் தாண்ட முடியாது.நீங்கள் செத்து ஒழியுங்கள் என விட்டுவிடுவேன்.என் கதி என்ன?என்னை அவிழ்த்து விடுங்கள்.நான் மும்பை நடந்தே போய்விடுகிறேன்.நீங்கள் அதன் பின் எக்கேடோ கெட்டு ஒழியுங்கள்” என்றார்.
அவர் பேச்சை இருவரும் கேட்கவில்லை.நன்றாக தூங்கி ரெஸ்ட் எடுத்தனர்.வயிறு நிறைய சாப்பிட்டனர். நள்ளிரவானதும் காரை ஓட்டி சென்று சாலை அருகே நிறுத்தினர்.
பகலிலேயே அந்த சாலையில் ஆள் நடமாட்டம் இருக்காது.இரவில் கேட்கவே வேண்டாம்.
”போய் வருகிறோம் பிட்சு” என்றான் இளங்கோ.”காலையில் இந்த வழியில் யாராவது வருவார்கள்.உன் கட்டை அவிழ்த்து விட சொல்லி காரை ஓட்டிக்கொண்டு போய்விடு.காரில் 8 லட்சம் பணம் இருக்கிறது.அதை வைத்து ஏதாவது தொழில் செய்து பிழைத்துக்கொள்.இப்படி கொரியாகாரனுக்கு மாமா வேலை செய்து பிழைக்காதே” என்றான்.
“நீங்கள் சத்தியமாக திரும்பி வரமாட்டீர்கள்.என்னை அடித்தீர்கள்,கட்டி வைத்தீர்கள் என்றெல்லாம் கோபித்து கொள்ளவில்லை.நிஜ அன்பில் சொல்லுகிறேன்.இது வேண்டாம்.உன் மனைவியும் இவர் மகளும் யானை வாயில் போன கரும்புகள்.இனி திரும்பி வர மாட்டார்கள்.இன்னும் ஒன்றும் கெட்டுவிடவில்லை.எங்கேயாவது போய் பிழைத்து கொள்ளுங்கள்.நான் சத்தியமாக போலிஸில் உங்களை காட்டி கொடுக்கவில்லை” என்றார் பிட்சு.
“என் மனைவியை பற்றி இப்போது கவலை இல்லை. அப்பனையும்,அண்ணனையும் இழந்த ஒரு அனாதை பெண்னை காக்க வேண்டும்” என்றான் சந்துரு. “வருகிறோம்” என்றான்.கிளம்பினான்.
“அனாதைகளுக்கு எல்லாம் நீ தான் ரட்சகனா?உனக்கு சண்டையே பிடிக்க தெரியாது.சொன்னா கேளு” என்றார் பிட்சு. அவர்கள் கேட்கவில்லை.கோயிலை நோக்கி நடக்க துவங்கினர். காட்டிலிருந்து ஆந்தை ஒன்று கூவியது.
“ஆந்தை கூவினா சாவுன்னு அர்த்தம்” என முணுமுணுத்தார் பிட்சு.”லேடி மாக்பெத், டங்கனை கொல்ல போனப்ப ஆந்தை கூவி வேண்டாம்னு சொல்லிச்சு.அவ கேக்கலை.இப்பவும் போகவேண்டாம்னு ஆந்தை சொல்லுது.நானும் சொல்றேன்.கேக்கறானுங்களா?” என திட்டினார். அதன்பின் கார் பின்சீட்டில் நிம்மதியாய் படுத்து தூங்க துவங்கினார். ஆந்தை மீண்டும் மீண்டும் கூவியது.
–
இளங்கோவும் சந்துருவும் காட்டில் புகுந்து கோயிலை நோக்கி நடந்தனர்.நேரம் நள்ளிரவை தாண்டி இருந்தது.டார்ச் வெளிச்சத்தை தரையில் அடித்து யாரும் கண்டுபிடிக்காதபடி நடந்தனர். கொஞ்ச தூரம் நடந்ததும் இளங்கோ நின்றார்.காட்டில் மல்பெர்ரி மரங்கள் நிறைய இருந்தன.
“காய்ந்த மல்பெர்ரி மரத்தை தேடு” என சொன்னார்.
“எதற்கு?” என புரியாமல் கேட்டான் சந்துரு.
”மல்பெர்ரி மரம் ஒரிசாவில் நிறைய வளர்ப்பார்கள்.அதில் மல்பெர்ரி பூச்சிகள் வலரும்.அதிலிருந்து ட்சார் எனும் பட்டு நூலை எடுப்பார்கள்” என சொன்னார் இளங்கோ.”முதல் முதலாக ஒரு பவுத்த பிட்சு தான் மல்பெர்ரி மரத்தை சீனாவிலிருந்து பிகாருக்கும்,அங்கிருந்து ஒரிசாவுக்கும் கொண்டுவந்தார்” என்றார்.
“தகவலுக்கு நன்றி.ஆனால் இப்போது இந்த நடுக்காட்டில் இதை தெரிந்து என்ன பயன்?” என கேட்டான் சந்துரு.
“பாதி காய்ந்த மல்பெர்ரி மரத்தை தேடு.மற்றதை அதன்பின் சொல்கிறேன்.சீக்கிரம்” என்றார் இளங்கோ.தேட ஆரம்பித்தார்.
முணுமுணுத்துக்கொண்டே சந்துருவும் தேடினான்.விரைவில் கண்டுபிடித்து விட்டான்.
காய்ந்த மல்பெர்ரி மரத்திலிருந்து கிளைகளை உடைத்தார் இளங்கோ.சின்ன சின்ன குச்சிகளாக சேர்த்தார்.கொஞ்சம் பெரிய குச்சிகளாக எடுத்து வளைத்தார்.
“என்ன செய்கிறீர்கள்?” என புரியாமல் கேட்டான் சந்துரு.
“அரிவாள் வாங்கப்போன இடத்தில் தான் இதை தெரிந்துகொண்டேன்” என்றார் இளங்கோ.”மல்பெர்ரி மரம் பட்டுபூச்சி வளர்ப்பிற்கும், soil erosion control க்கும் மட்டும் உதவுவதில்லை.சீனர்கள் அதில் அருமையாக வில் அம்பு செய்வார்கள்.மூங்கில் கிடைக்காத போது மல்பெர்ரி தான் பயன்படும்.பச்சை மரம் உதவாது.பாதி காய்ந்த மரம் தான் உதவும்.இப்ப புரியுதா?” என்றார்.
மரக்கிளைகளை செதுக்கிக்கொண்டே சொன்னார்.”3 முதல் 4 அடி வில்கள் மிகவும் ஆபத்தானவை.கிட்டத்தட்ட 900 அடி தூரம் வரை சக்தியோடு அம்பு பாயும்.சீனர்கள் இதில் மிக திறமையானவர்கள்.முழுக்க முழுக்க மூங்கிலையும் மரத்தையும் வைத்து மட்டுமே அம்பு செய்தார்கள்.ஆனால் ஒரிசாவில் அம்பு முனையில் கூரிய இரும்பை பொறுத்துவார்கள்.அடிபட்ட மிருகம் அம்பை உதறி விட்டு ஓடினால் கூட முனை உடலிலேயே தங்கி உயிரை குடித்து விடும்.அம்பு நாணுக்கு குதிரை முடியிலிருந்து சீன புல் நார் வரை பயன்படுத்துவார்கள்.ஆனால் அதில் சக்தி வாய்ந்தது இதோ இம்மாதிரியான சீன புல்நார் தான்” என்றார். இரண்டு விற்களும் அம்புகளும் தயாராயின.சிறிய அம்பு முனைகளை எடுத்தார்.மரக்குச்சிகளின் முனையில் வைத்து பொருத்தியதும் அம்புகள் தயாராகிவிட்டன.
“நீங்க என்ன தொழில் இதுக்கு முந்தி பாத்தீங்க?கசாப்பு கடை வெச்சிருந்தீங்களா?” என்றான் சந்துரு. “கிட்டத்தட்ட அந்த மாதிரிதான்.நான் டாக்டர்” என்றார் இளங்கோ.
–
கோயில் அருகே சென்றார்கள்.கோயில் காம்பவுண்ட் 12 அடி உயரம் இருந்தது.ஏற முடியாது என்பது தெரிந்தது.காம்பவுண்டுக்கு வெளியே காவலாளி ஆபீஸ் ஒன்று இருந்தது.எத்தனை பேர் அதில் இருந்தனர் என தெரியவில்லை. என்ன செய்வது என யோசித்தபோது ஆபிஸிலிருந்து இயந்திர துப்பாக்கி ஏந்திய பிட்சு ஒருவர் இயற்கை அழைப்புக்கு வெளியே வந்தார். நைசாக அவரை பின் தொடர்ந்தனர்.துப்பாக்கியை கீழே வைத்துவிட்டு பிட்சு முதுகை காட்டியபடி உட்கார்ந்தார்.
“அம்பு விட தெரியுமா?” என கேட்டார் இளங்கோ.
அம்பை நாணில் ஏற்றினார்.”அரிவாளை அந்த பையன் சாணை தீட்டும்போது அம்பு விட்டு பழகிக்கொண்டிருந்தேன்” என்றார். விஷ் என்ற சத்தம் கேட்டது.200 அடி தூரத்திலிருந்து விடப்பட்ட இளங்கோவின் அம்பு ஆவேசமாக பிட்சுவின் கழுத்தை துளைத்தது.
சந்துருவின் அம்பு பிட்சுவை விட்டு 10 அடி தள்ளி விழுந்தது. பிட்சுவின் கலாஷ்னிகோவை எடுத்து இயக்கி பார்த்தனர்.எப்படி சுடுவது என தெரியவில்லை.அதை அங்கேயே கடாசிவிட்டு மீண்டும் கேட்டருகே போய் காத்திருந்தனர். 15 நிமிடம் கழித்து போன பிட்சு திரும்பி வராததால் அவரை தேட இருவர் துப்பாக்கிகளுடன் வெளீயே வந்தனர்.காட்டினுள் நுழைந்தனர். இரண்டாவது நிமிடத்தில் சரியாக இரண்டு அம்புகள் ஏவப்பட்டன.வழக்கம்போல் ஒன்று மிகச்சரியாக ஆளை அடித்து வீழ்த்தியது.இன்னொன்று தன் குறியை தவற விட்டது.ஆனால் அந்த பிட்சு அதிர்ச்சியில் திரும்புமுன் பெரிய கல் ஒன்று அவர் மீது வீசப்பட்டது.அடி வயிற்றில் அடி வாங்கி அவர் கீழே விழுந்தார்.
“வாழ்க்கையில் முதல் கொலை” என்றான் அதிர்ச்சியுடன் சந்துரு.
“உனக்குதான் அப்படி.நான் படிக்கும்போதே ஒரு நோயாளியை மருந்து மாற்றிக்கொடுத்து பரலோகம் அனுப்பி வைத்தேன்” என்றார் இளங்கோ. மயங்கிகிடந்த பிட்சுவின் அருகே சென்றார்.”சின்ன பையன்.பார்க்க பாவமாக இருக்கிறது.ஆனால் இவனை விட்டால் நமக்குத்தான் ஆபத்து” என்றார். கத்தியை ஒரு தரம் எடுத்து விட்டால் கொலைகளை தொடர்ந்து செய்துகொண்டே இருக்க வேண்டும் என்ற பாடத்தை முதல் முதலாக அறியும் யாரும் அதிரவே செய்வார்கள்.
—————————————-
காவல் ஆபிசுக்குள் வேறு யாரும் இல்லை.சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே நுழைந்தார்கள்.நல்ல வேளையாக நாய் எதுவும் இல்லை.பதுங்கி பதுங்கி போனபோது வாசல் கதவு அருகே துப்பாக்கியுடன் இருவர் நிற்பது தெரிந்தது. “இப்போது உன் குறி தவ்றினால் நம் உயிர் போய் விடும்” என்றார் இளங்கோ.இருவரும் அம்பை விடுத்தனர்.
குறி தப்பவில்லை.அலறலோடு இருவரும் அம்பு பட்டு கீழே விழுந்தனர். உள்ளே இருந்து யாரும் வெளியே வரவில்லை.சற்று நேரம் பதுங்கி இருந்து பார்த்துவிட்டு உள்ளே சென்றனர்.எதிரே இரண்டு பிட்சுக்கள் நடந்து வந்துகொண்டு இருந்தனர்.தூண் பின்னே ஒளிந்திருந்து கத்தியோடு பாய்ந்தனர்.சத்தம்போடாமல் இரண்டு பேர் காலியாயினர். மெதுவாக ஒவ்வொரு அறையாக தேடி பார்த்தபடி சென்றனர்.
ஒரு அறைக்குள் எட்டி பார்த்தபோது நிறைய பிட்சுக்கள் தூங்குவது தெரிந்தது.மெதுவாக உள்ளே நுழைந்தனர். சந்துரு இரு கைகளிலும் இரு கத்திகளை எடுத்தான்.தூங்கிய இருவர் நடுவே நின்றான்.அசந்து தூங்கினர் இருவரும்.கை நடுங்க கத்திகளை ஆவேசமாக இறக்கினான். கத்தி இறங்குமுன் அலறல் கேட்டது.அது இளங்கோ குத்திய இருவரின் அலறல்.
அனைவரும் பதறி அடித்துக்கொண்டு எழுந்தனர்.கோடாரியை எடுத்து சுற்றினான் சந்துரு.இரண்டு மூன்று பேர் கீழே விழும் சத்தம் கேட்டது.அதன் பின் விளக்கு எரிந்தது. 8 பேர் இறந்து கிடந்தனர். அறையின் நடுவே ரத்தக்கறை படிந்த கோடாரியுடன் இருவரும் நின்றிருந்தனர்.அவர்களை ஐந்து பிட்சுக்கள் சுற்றி வளைத்தனர்.
கராத்தே தெரியாத இருவர் என்ன தான் கோடாரியுடன் இருந்தாலும் கராத்தே தெரிந்த ஐவருக்கு சமமாவார்களா என்ன? கழுத்தில் கராத்தெ வெட்டு வாங்கி சந்துரு விழுந்தான்.அவனை மூவர் பிடித்து அமுக்கினர்.இளங்கோ ஒருவன் தலையை வெட்டினார்.ஆனால் அடுத்தவன் வெகு திறமையானவனாக இருந்தான்.அடிவயிற்றில் எத்து வாங்கி மயங்கி விழுந்தார்.பிட்சுகள் அவர்கள் இருவரையும் சங்கிலியால் தரையில் கட்டி போட்டனர்.
மீதமிருந்த நான்கு பிட்சுக்களும் பேயை பார்ப்பது போல் தரையில் கிடந்த அவர்கள் இருவரையும் பார்த்தனர்.தாங்கள் உயிரோடு இருப்பதை அவர்களால் நம்பவே முடியவில்லை.
(தொடரும்)
Nice blog. I read all four parts… Your writing style is real fast..
// From Part I
சந்திரசேகரன் நீண்டநாள் வெளியூர் சுற்றுப்பயணம் போய்விட்டு திரும்பி வந்தான்.வந்தபோது அவன் மனைவி காணாமல் போயிருந்தாள்.எஙெங்கு தேடியும் அவள் கிடைக்கவில்லை.போலிஸ் புகார் கொடுத்தான்.பிறகு எதேச்சையாய் அவள் டயரி சிக்க அதில் “ஷென்ரிக்கியோ” என அடிக்கோடிட்டு எழுதப்பட்டிருந்தது.
//
Oh my god – this itself could be written for several pages. Please please slow down. Why hurry? You write wonderfully and the story line is rich… I feel like reading the script of a cinema…
And per post please don’t write more than say 25 lines… This is just my humble opinion, thats all. I will look forward to the next episode.
Comment by ஸ்ரீகாந்த் — ஆகஸ்ட் 26, 2007 @ 5:26 பிற்பகல்
Thank you Srikanth.I will post short posts in future.The beginning part of the story was shortened due to a different reason.It could have defenitely been better.I agree.
Thanks
Comment by Selvan — ஆகஸ்ட் 26, 2007 @ 8:39 பிற்பகல்