உலகின் புதிய கடவுள்

ஜூலை 28, 2007

அஞ்சேல் எனாத ஆண்மை – 4

Filed under: novel — Selvan @ 6:07 மு.பகல்

ஒரு நிமிடம் தான் சந்துரு திகைத்தான்.அடுத்த நிமிடம் இயல்பு நிலைக்கு வந்துவிட்டான்.இளங்கோ இன்னும் அதிர்ச்சியிலேயே இருந்தார்.சந்துரு அவரை தேற்ற வேண்டியதாக போனது.

“இவன் புளுகுகிறான்” என்றான் சந்துரு.”சூரியன் மேற்கே உதிக்கும் என்றால் கூட நம்புவேன்.என் மனைவியை பற்றி யார் சொன்னாலும் நம்பமாட்டேன்” என்றான் சந்துரு.

“கோவலனை பற்றி கண்ணகி இப்படித்தான் நம்பிக்கை வைத்திருந்திருப்பாள்” என்றார் பிட்சு.”சொல்லி திருந்தாத ஜென்மம் நீ.எனக்கென்ன எக்கேடோ கெட்டு ஒழி” என்றார் பிட்சு.

“இவன் சொல்லுவது பொய்யாக இருக்கும் என எப்படி சொல்லுகிறீர்கள்?உங்கள் மனைவி உங்கள் மீது அத்தனை அன்பு வைத்திருந்தால் ஏன் இத்தனை நாளாக உங்களை தொடர்பு கொள்ளவில்லை?ஏன் அந்த சங்கத்தில் சேர்ந்தார்?ஏன் கொரியா போனார்?” என கேட்டார் இளங்கோ.

“அவளாக போயிருக்க மாட்டாள்.இந்த சண்டாளர்கள் கடத்திக்கொண்டு போயிருக்கிறார்கள்” என்றான் சந்துரு.

“அட பாவமே” என சிரித்தார் பிட்சு.”உன் மனைவி என்ன உலக அழகி ஐஸ்வர்யா ராயா,கார் வைத்து கடத்திக்கொண்டு போக?அசோகவனத்து சீதை மாதிரி நீ வருவாய் என கண்ணீரோடு காத்துக்கொண்டிருக்கிறாள் என நினைக்கிறாயாக்கும்?நெனப்பு தான் பொழப்பை கெடுக்குமாம்” என்றார் பிட்சு.

 ”உன்னை இதுவரை நான் அடிக்கவில்லை என்பதால் எப்போதும் அடிக்கமாட்டேன் என நினைத்துக் கொள்ளாதே” என எச்சரித்தான் சந்துரு.

“நீ மீசை வைத்த ஆண்பிள்ளை என்றால் கட்டை கழற்றி விட்டு அடி பார்க்கலாம்.” என்றார் பிட்சு.

“மீசையை நாளை எடுத்துவிடுகிறேன்.திருப்தியா?” என்றான் சந்துரு.

 —–

மும்பை நகர எல்லையை தாண்டி அகமதாபாத் சாலையில் கார் விரைந்தது.மனோரி அருகே ஒதுக்குபுறமாக வண்டியை நிறுத்தினார்கள்.சாப்பிட்டுக்கொண்டே என்ன செய்வது என ஆலோசித்தார்கள்.

“என் மனைவியும்,உங்கள் மகளும் கொரியாவில் இருக்கின்றனரா,இல்லை இந்த மொட்டையன் வழக்கம் போல் பொய் சொல்லியிருக்கிறானா என்பதை கண்டுபிடிக்க வேண்டும்” என்றான் சந்துரு.

“அடேய் பிட்சு அவர்கள் இருவரும் கொரியாவில் தான் இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரம் என்ன? என்றான்.

“என் வார்த்தை தான் ஆதாரம்.நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம்” என்றார் பிட்சு.

 ”சரி…சங்க உறுப்பினர்களை எப்படி கொரியாவுக்கு அனுப்புவீர்கள்?” என கேட்டார் இளங்கோ.

“ஒரிசாவில் உள்ள எங்கள் கிளைக்கு அனுப்புவோம்.அங்கிருந்து மாதம் ஒரு முறை ஸ்பெஷலாக தனி விமானம் வந்து அவர்களை கொரியாவுக்கு கூட்டிப்போகும்” என்றார் பிட்சு.

“நீங்கள் கேட்காமலேயே ஒரு தகவலையும் சொல்கிறேன்.சேட்டு மகள் மீரா தற்போது ஒரிசாவில் தான் இருக்கிறாள்.அடுத்த வாரம் கொரியா அனுப்புகிறோம்” என்றார் பிட்சு.

“இத்தனை தகவல்கள் சொன்ன நீ அவரை மீட்பது எப்படி என்றும் சொல்லலாமே?உனக்கு புண்ணியமா போகும்” என்றார் இளங்கோ.

“இயந்திர துப்பாக்கிகளுடன் 20 பிட்சுக்கள் அங்கு இருக்கிறார்கள்.என்னை விட கராத்தே தெரிந்தவர்கள்.உள்ளூர் போலிஸுக்கு கணிசமான மாமூல் போயிவிடும்.ஒரிசா மந்திரி ஒருவரே எங்கள் சங்க உறுப்பினர்.இதற்கு மேல் என்ன செய்வது என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்” என்றார் பிட்சு.

“சரி கிளம்புவோம்” என்றான் சந்துரு. “

எங்கே?” என புரியாமல் கேட்டார் பிட்சு.

—–

மாருதி காரிலேயே சுந்தர்கர் போய் சேர்ந்தார்கள்.சுந்தர்கர் ஒரிசா,ஜார்கண்ட் எல்லையில் உள்ள பகுதி.பெரிய நகரமும் கிடையாது.சுந்தர்கரிலிருந்து கோயில் இருக்கும் தல்சாராவுக்கு செல்லும் ரோடு படுமோசமாக இருந்தது.கோயில் ஒதுக்குப்புறமாக காட்டில் இருந்தது.உள்ளூர் மக்கள் யாரும் அங்கு வருவதில்லை.அப்படி ஒரு கோயில் இருக்கு என்பதே அவர்களுக்கு தெரியுமா என்பது சந்தேகமாக இருந்தது. போலிசுக்கு பயந்து பதுங்கி பதுங்கி வந்ததில் பிரயாணத்துக்கே ஐந்து நாள் ஆகிவிட்டது.

நாளை மறுநாள் விமானம் வரும் என பிட்சு சொன்னார்.ஏதேனும் செய்வதென்றால் இன்னும் 30 மணிநேரத்துக்குள் செய்ய வேண்டும். என்ன செய்வது என யோசித்து,யோசித்தே இரவும் பாதிநாளும் போய்விட்டது.பிட்சு வேறு அடிக்கடி எரிச்சலை கிளப்பும் வகையில் பேசிவந்தார்.

சாயந்திரம் 3 மணிக்கு தான் சந்துருவுக்கு அந்த ஐடியா வந்தது. “தற்கொலை படை போல் உள்ளே போய் சண்டை பிடிக்க வேண்டும்.குறைந்தது 10 பேரையாவது வெட்டி போட்டு சாகவேண்டும்”

“உனக்கு மறை கழண்டிருக்கிறது” என சொன்னார் பிட்சு.”யார் பக்கத்திலும் நீ போகவே முடியாது.இயந்திர துப்பாக்கி வைத்திருக்கிறார்கள்.நீ என்ன ஆயுதம் வைத்திருக்கிறாய்?” என கேட்டார் பிட்சு. பேனாகத்தி தான் அவர்களிடம் இருந்த ஒரே ஆயுதம்.

 தல்சாரா போய் ஏதாவது ஆயுதம் கிடைத்தால் வாங்கிவருகிறேன் என கிளம்பிபோனார் இளங்கோ.5 மணி சுமாருக்கு நாலைந்து கோடாரிகளுடனும்,நீள கத்திகளுடனும்,அரிவாள்களுடனும் வந்தார்.

“இதை வைத்து சவரம் செய்யத்தான் முடியும்” என்றார் பிட்சு.”அடேய் மாக்கான்களா.ஏண்டா இப்படி வெறி பிடித்து அலைகிறீர்கள்?கோயில் காம்பவுண்டையே உங்களால் தாண்ட முடியாது.நீங்கள் செத்து ஒழியுங்கள் என விட்டுவிடுவேன்.என் கதி என்ன?என்னை அவிழ்த்து விடுங்கள்.நான் மும்பை நடந்தே போய்விடுகிறேன்.நீங்கள் அதன் பின் எக்கேடோ கெட்டு ஒழியுங்கள்” என்றார்.

அவர் பேச்சை இருவரும் கேட்கவில்லை.நன்றாக தூங்கி ரெஸ்ட் எடுத்தனர்.வயிறு நிறைய சாப்பிட்டனர். நள்ளிரவானதும் காரை ஓட்டி சென்று சாலை அருகே நிறுத்தினர்.

பகலிலேயே அந்த சாலையில் ஆள் நடமாட்டம் இருக்காது.இரவில் கேட்கவே வேண்டாம்.

 ”போய் வருகிறோம் பிட்சு” என்றான் இளங்கோ.”காலையில் இந்த வழியில் யாராவது வருவார்கள்.உன் கட்டை அவிழ்த்து விட சொல்லி காரை ஓட்டிக்கொண்டு போய்விடு.காரில் 8 லட்சம் பணம் இருக்கிறது.அதை வைத்து ஏதாவது தொழில் செய்து பிழைத்துக்கொள்.இப்படி கொரியாகாரனுக்கு மாமா வேலை செய்து பிழைக்காதே” என்றான்.

“நீங்கள் சத்தியமாக திரும்பி வரமாட்டீர்கள்.என்னை அடித்தீர்கள்,கட்டி வைத்தீர்கள் என்றெல்லாம் கோபித்து கொள்ளவில்லை.நிஜ அன்பில் சொல்லுகிறேன்.இது வேண்டாம்.உன் மனைவியும் இவர் மகளும் யானை வாயில் போன கரும்புகள்.இனி திரும்பி வர மாட்டார்கள்.இன்னும் ஒன்றும் கெட்டுவிடவில்லை.எங்கேயாவது போய் பிழைத்து கொள்ளுங்கள்.நான் சத்தியமாக போலிஸில் உங்களை காட்டி கொடுக்கவில்லை” என்றார் பிட்சு.

“என் மனைவியை பற்றி இப்போது கவலை இல்லை. அப்பனையும்,அண்ணனையும் இழந்த ஒரு அனாதை பெண்னை காக்க வேண்டும்” என்றான் சந்துரு. “வருகிறோம்” என்றான்.கிளம்பினான்.

“அனாதைகளுக்கு எல்லாம் நீ தான் ரட்சகனா?உனக்கு சண்டையே பிடிக்க தெரியாது.சொன்னா கேளு” என்றார் பிட்சு. அவர்கள் கேட்கவில்லை.கோயிலை நோக்கி நடக்க துவங்கினர். காட்டிலிருந்து ஆந்தை ஒன்று கூவியது.

“ஆந்தை கூவினா சாவுன்னு அர்த்தம்” என முணுமுணுத்தார் பிட்சு.”லேடி மாக்பெத், டங்கனை கொல்ல போனப்ப ஆந்தை கூவி வேண்டாம்னு சொல்லிச்சு.அவ கேக்கலை.இப்பவும் போகவேண்டாம்னு ஆந்தை சொல்லுது.நானும் சொல்றேன்.கேக்கறானுங்களா?” என திட்டினார். அதன்பின் கார் பின்சீட்டில் நிம்மதியாய் படுத்து தூங்க துவங்கினார். ஆந்தை மீண்டும் மீண்டும் கூவியது.

இளங்கோவும் சந்துருவும் காட்டில் புகுந்து கோயிலை நோக்கி நடந்தனர்.நேரம் நள்ளிரவை தாண்டி இருந்தது.டார்ச் வெளிச்சத்தை தரையில் அடித்து யாரும் கண்டுபிடிக்காதபடி நடந்தனர். கொஞ்ச தூரம் நடந்ததும் இளங்கோ நின்றார்.காட்டில் மல்பெர்ரி மரங்கள் நிறைய இருந்தன.

“காய்ந்த மல்பெர்ரி மரத்தை தேடு” என சொன்னார்.

“எதற்கு?” என புரியாமல் கேட்டான் சந்துரு.

 ”மல்பெர்ரி மரம் ஒரிசாவில் நிறைய வளர்ப்பார்கள்.அதில் மல்பெர்ரி பூச்சிகள் வலரும்.அதிலிருந்து ட்சார் எனும் பட்டு நூலை எடுப்பார்கள்” என சொன்னார் இளங்கோ.”முதல் முதலாக ஒரு பவுத்த பிட்சு தான் மல்பெர்ரி மரத்தை சீனாவிலிருந்து பிகாருக்கும்,அங்கிருந்து ஒரிசாவுக்கும் கொண்டுவந்தார்” என்றார்.

“தகவலுக்கு நன்றி.ஆனால் இப்போது இந்த நடுக்காட்டில் இதை தெரிந்து என்ன பயன்?” என கேட்டான் சந்துரு.

“பாதி காய்ந்த மல்பெர்ரி மரத்தை தேடு.மற்றதை அதன்பின் சொல்கிறேன்.சீக்கிரம்” என்றார் இளங்கோ.தேட ஆரம்பித்தார்.

முணுமுணுத்துக்கொண்டே சந்துருவும் தேடினான்.விரைவில் கண்டுபிடித்து விட்டான்.

காய்ந்த மல்பெர்ரி மரத்திலிருந்து கிளைகளை உடைத்தார் இளங்கோ.சின்ன சின்ன குச்சிகளாக சேர்த்தார்.கொஞ்சம் பெரிய குச்சிகளாக எடுத்து வளைத்தார்.

“என்ன செய்கிறீர்கள்?” என புரியாமல் கேட்டான் சந்துரு.

“அரிவாள் வாங்கப்போன இடத்தில் தான் இதை தெரிந்துகொண்டேன்” என்றார் இளங்கோ.”மல்பெர்ரி மரம் பட்டுபூச்சி வளர்ப்பிற்கும், soil erosion control க்கும் மட்டும் உதவுவதில்லை.சீனர்கள் அதில் அருமையாக வில் அம்பு செய்வார்கள்.மூங்கில் கிடைக்காத போது மல்பெர்ரி தான் பயன்படும்.பச்சை மரம் உதவாது.பாதி காய்ந்த மரம் தான் உதவும்.இப்ப புரியுதா?” என்றார்.

மரக்கிளைகளை செதுக்கிக்கொண்டே சொன்னார்.”3 முதல் 4 அடி வில்கள் மிகவும் ஆபத்தானவை.கிட்டத்தட்ட 900 அடி தூரம் வரை சக்தியோடு அம்பு பாயும்.சீனர்கள் இதில் மிக திறமையானவர்கள்.முழுக்க முழுக்க மூங்கிலையும் மரத்தையும் வைத்து மட்டுமே அம்பு செய்தார்கள்.ஆனால் ஒரிசாவில் அம்பு முனையில் கூரிய இரும்பை பொறுத்துவார்கள்.அடிபட்ட மிருகம் அம்பை உதறி விட்டு ஓடினால் கூட முனை உடலிலேயே தங்கி உயிரை குடித்து விடும்.அம்பு நாணுக்கு குதிரை முடியிலிருந்து சீன புல் நார் வரை பயன்படுத்துவார்கள்.ஆனால் அதில் சக்தி வாய்ந்தது இதோ இம்மாதிரியான சீன புல்நார் தான்” என்றார். இரண்டு விற்களும் அம்புகளும் தயாராயின.சிறிய அம்பு முனைகளை எடுத்தார்.மரக்குச்சிகளின் முனையில் வைத்து பொருத்தியதும் அம்புகள் தயாராகிவிட்டன.

“நீங்க என்ன தொழில் இதுக்கு முந்தி பாத்தீங்க?கசாப்பு கடை வெச்சிருந்தீங்களா?” என்றான் சந்துரு. “கிட்டத்தட்ட அந்த மாதிரிதான்.நான் டாக்டர்” என்றார் இளங்கோ.

கோயில் அருகே சென்றார்கள்.கோயில் காம்பவுண்ட் 12 அடி உயரம் இருந்தது.ஏற முடியாது என்பது தெரிந்தது.காம்பவுண்டுக்கு வெளியே காவலாளி ஆபீஸ் ஒன்று இருந்தது.எத்தனை பேர் அதில் இருந்தனர் என தெரியவில்லை. என்ன செய்வது என யோசித்தபோது ஆபிஸிலிருந்து இயந்திர துப்பாக்கி ஏந்திய பிட்சு ஒருவர் இயற்கை அழைப்புக்கு வெளியே வந்தார். நைசாக அவரை பின் தொடர்ந்தனர்.துப்பாக்கியை கீழே வைத்துவிட்டு பிட்சு முதுகை காட்டியபடி உட்கார்ந்தார்.

“அம்பு விட தெரியுமா?” என கேட்டார் இளங்கோ.

அம்பை நாணில் ஏற்றினார்.”அரிவாளை அந்த பையன் சாணை தீட்டும்போது அம்பு விட்டு பழகிக்கொண்டிருந்தேன்” என்றார். விஷ் என்ற சத்தம் கேட்டது.200 அடி தூரத்திலிருந்து விடப்பட்ட இளங்கோவின் அம்பு ஆவேசமாக பிட்சுவின் கழுத்தை துளைத்தது.

சந்துருவின் அம்பு பிட்சுவை விட்டு 10 அடி தள்ளி விழுந்தது. பிட்சுவின் கலாஷ்னிகோவை எடுத்து இயக்கி பார்த்தனர்.எப்படி சுடுவது என தெரியவில்லை.அதை அங்கேயே கடாசிவிட்டு மீண்டும் கேட்டருகே போய் காத்திருந்தனர். 15 நிமிடம் கழித்து போன பிட்சு திரும்பி வராததால் அவரை தேட இருவர் துப்பாக்கிகளுடன் வெளீயே வந்தனர்.காட்டினுள் நுழைந்தனர். இரண்டாவது நிமிடத்தில் சரியாக இரண்டு அம்புகள் ஏவப்பட்டன.வழக்கம்போல் ஒன்று மிகச்சரியாக ஆளை அடித்து வீழ்த்தியது.இன்னொன்று தன் குறியை தவற விட்டது.ஆனால் அந்த பிட்சு அதிர்ச்சியில் திரும்புமுன் பெரிய கல் ஒன்று அவர் மீது வீசப்பட்டது.அடி வயிற்றில் அடி வாங்கி அவர் கீழே விழுந்தார்.

“வாழ்க்கையில் முதல் கொலை” என்றான் அதிர்ச்சியுடன் சந்துரு.

“உனக்குதான் அப்படி.நான் படிக்கும்போதே ஒரு நோயாளியை மருந்து மாற்றிக்கொடுத்து பரலோகம் அனுப்பி வைத்தேன்” என்றார் இளங்கோ. மயங்கிகிடந்த பிட்சுவின் அருகே சென்றார்.”சின்ன பையன்.பார்க்க பாவமாக இருக்கிறது.ஆனால் இவனை விட்டால் நமக்குத்தான் ஆபத்து” என்றார். கத்தியை ஒரு தரம் எடுத்து விட்டால் கொலைகளை தொடர்ந்து செய்துகொண்டே இருக்க வேண்டும் என்ற பாடத்தை முதல் முதலாக அறியும் யாரும் அதிரவே செய்வார்கள்.

 —————————————-

காவல் ஆபிசுக்குள் வேறு யாரும் இல்லை.சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே நுழைந்தார்கள்.நல்ல வேளையாக நாய் எதுவும் இல்லை.பதுங்கி பதுங்கி போனபோது வாசல் கதவு அருகே துப்பாக்கியுடன் இருவர் நிற்பது தெரிந்தது. “இப்போது உன் குறி தவ்றினால் நம் உயிர் போய் விடும்” என்றார் இளங்கோ.இருவரும் அம்பை விடுத்தனர்.

குறி தப்பவில்லை.அலறலோடு இருவரும் அம்பு பட்டு கீழே விழுந்தனர். உள்ளே இருந்து யாரும் வெளியே வரவில்லை.சற்று நேரம் பதுங்கி இருந்து பார்த்துவிட்டு உள்ளே சென்றனர்.எதிரே இரண்டு பிட்சுக்கள் நடந்து வந்துகொண்டு இருந்தனர்.தூண் பின்னே ஒளிந்திருந்து கத்தியோடு பாய்ந்தனர்.சத்தம்போடாமல் இரண்டு பேர் காலியாயினர். மெதுவாக ஒவ்வொரு அறையாக தேடி பார்த்தபடி சென்றனர்.

ஒரு அறைக்குள் எட்டி பார்த்தபோது நிறைய பிட்சுக்கள் தூங்குவது தெரிந்தது.மெதுவாக உள்ளே நுழைந்தனர். சந்துரு இரு கைகளிலும் இரு கத்திகளை எடுத்தான்.தூங்கிய இருவர் நடுவே நின்றான்.அசந்து தூங்கினர் இருவரும்.கை நடுங்க கத்திகளை ஆவேசமாக இறக்கினான். கத்தி இறங்குமுன் அலறல் கேட்டது.அது இளங்கோ குத்திய இருவரின் அலறல்.

அனைவரும் பதறி அடித்துக்கொண்டு எழுந்தனர்.கோடாரியை எடுத்து சுற்றினான் சந்துரு.இரண்டு மூன்று பேர் கீழே விழும் சத்தம் கேட்டது.அதன் பின் விளக்கு எரிந்தது. 8 பேர் இறந்து கிடந்தனர். அறையின் நடுவே ரத்தக்கறை படிந்த கோடாரியுடன் இருவரும் நின்றிருந்தனர்.அவர்களை ஐந்து பிட்சுக்கள் சுற்றி வளைத்தனர்.

கராத்தே தெரியாத இருவர் என்ன தான் கோடாரியுடன் இருந்தாலும் கராத்தே தெரிந்த ஐவருக்கு சமமாவார்களா என்ன? கழுத்தில் கராத்தெ வெட்டு வாங்கி சந்துரு விழுந்தான்.அவனை மூவர் பிடித்து அமுக்கினர்.இளங்கோ ஒருவன் தலையை வெட்டினார்.ஆனால் அடுத்தவன் வெகு திறமையானவனாக இருந்தான்.அடிவயிற்றில் எத்து வாங்கி மயங்கி விழுந்தார்.பிட்சுகள் அவர்கள் இருவரையும் சங்கிலியால் தரையில் கட்டி போட்டனர்.

மீதமிருந்த நான்கு பிட்சுக்களும் பேயை பார்ப்பது போல் தரையில் கிடந்த அவர்கள் இருவரையும் பார்த்தனர்.தாங்கள் உயிரோடு இருப்பதை அவர்களால் நம்பவே முடியவில்லை.

(தொடரும்)

அஞ்சேல் எனாத ஆண்மை -3

Filed under: novel — Selvan @ 5:59 மு.பகல்

தான் வகையாக மாட்டிக்கொண்டதை பிட்சு உணர்ந்தார்.அவர் தற்காப்பு கலைகளில் மிகுந்த திறன் பெற்றவர்.அந்த இயக்கத்து பிட்சுகள் அனைவரும் தற்காப்பு கலையில் தேர்ந்தவர்கள்.ஆனால் கைகால் கட்டிப் போடப்பட்ட நிலையில் பிட்சு செயலற்றவராக இருந்தார்.

பிட்சு முன் தன் மகளின் போட்டோவை நீட்டினார் இளங்கோ.”இவள் எங்கே இருக்கிறாள்?” என அமைதியாக கேட்டார்.பதில் சொல்லாமல் மவுனமாக இருந்தார் பிட்சு.

முட்டியை மடக்கி அடிவயிற்றில் குத்தினார் இளங்கோ.”அம்மா..” என அலறினார் பிட்சு.தற்காப்பு கலைகளில் ஓரளவு வலி தாங்க கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.ஆனால் சித்ரவதையை ஓரளவுக்கு மேல் தாங்க முடியாது.

காலிங்பெல் அடித்தது.கதவை திறந்தால் சந்துரு.”வாயை திறக்க மாட்டேன் என்கிறான்” என்றார் இளங்கோ.இருவரும் பிட்சுவிடம் வந்தார்கள்.”என்ன அடிக்கவே ஆரம்பிக்கவில்லை போலிருக்கிறதே?” என சந்துரு கேட்க “இப்போதுதான் ஆரம்பித்தேன்” என்றார் இளங்கோ.

“அடி எல்லாம் சரிப்பட்டு வராது.போய் சூட்டுக்கோலை அடுப்பில் வைத்து எடுத்து வாருங்கள்” என்றான் சந்துரு.அவன் அம்மா அவனை அப்படித்தான் சின்ன வயதில் மிரட்டுவார்கள்.அந்த மிரட்டல் எப்போதும் வேலை செய்திருக்கிறது.பிட்சுவிடம் அதை கேட்டவுடன் கண்ணில் பயம் தாண்டவமாடியது.

“வேண்டாம்.சொல்கிறேன்.கட்டை அவிழ்த்து விடுங்கள்” என்றார்.

“நீ என்னை அடித்த அடி இன்னும் நினைவில் இருக்கிறது.கட்டை அவிழ்க்க முடியாது.அப்படியே சொல்” என்றான் சந்துரு.

“நீங்கள் செய்வது நியாயமா?” என்றார் பிட்சு.”எங்கள் மதத்தில் இந்தியாவில் மட்டும் லட்சம் பேர் இருக்கிறார்கள்.அதில் முக்கால்வாசி பேர் பெண்கள்.இதில் இரண்டு போட்டோவை காட்டி இவர்கள் எங்கே என கேட்டால் எனக்கு எப்படி தெரியும்?அனைத்து மடங்களுக்கும் கடிதம் போடுகிறேன்.அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என அப்போதுதான் தெரியும்” என்றார் பிட்சு.

 ”இவன் சரிப்பட்டு வரமாட்டான்.சூட்டுக்கோலை எடுத்து வாருங்கள்.சூடு போடவேண்டுமென்பது எனக்கு ரொம்ப நாள் ஆசை” என்றான் சந்துரு.

“நான் பொய் சொல்லவில்லை.என்னை கொன்றாலும் உண்மை இதுதான்” என்றார் பிட்சு.

 ”சரி.அனைத்து கிளைகளுக்கும் இமெயில் இருக்கிறதல்லவா?நான் உங்கள் சங்க வெப்சைட்டில் பார்த்திருக்கிறேன்.ஈமெயிலில் போட்டோவை அனுப்பி கேட்கிறோம்.உங்கள் மெயில் ஐடியும் பாஸ்வர்டும் கொடுங்கள்” என்றான் சந்துரு.

“நான் காணாமல் போனது இந்தியா முழுக்க அனைத்து கிளைகளுக்கும் இன்னேரம் தெரிந்திருக்கும்.நீ என் மின்னஞ்சலில் மெயில் அனுப்பினால் பதில் வராது.நீயும் அடுத்த நிமிடம் மாட்டி கொள்வாய்” என்றார் பிட்சு.

“நிஜம் தான்” என்றார் இளங்கோ.”ஆனால் இது உண்மை என்றால் நீ சந்தோஷமாக மெயில் ஐடியை தந்து எங்களை மாட்டி விட்டிருப்பாய்.இதை சொல்லி இருக்க மாட்டாய்.ஆக மெயில் ஐடியில் ஏதோ விஷயம் இருக்கிறது.உன் பாஸ்வர்ட் என்ன,சொல்கிறாயா?” என்றார் இளங்கோ.

“நான் சொன்னால் நம்ப மாட்டேன் என்கிறீர்கள்.நான் காணாமல் போனதும் இந்நேரம் என் ஆபிஸ் இமெயில் ஐடியை முடக்கியிருப்பார்கள்.நீங்கள் லாகின் செய்தால் ஐபி கண்டுபிடித்து விடுவார்கள்.எனக்கு என் ஆபிஸ் ஐடி தவிர யாகூ ஐடி ஒன்று இருக்கிறது.நம்பலை என்றால் ஐடி பாஸ்வர்ட் தருகிறேன்.எக்கேடோ கெட்டு ஒழியுங்கள்.எனக்கென்ன?” என்றார் பிட்சு.

“சரி..உன் சங்கத்தை பற்றி சொல்.அதாவது தெரியுமல்லவா?இல்லை அதுவும் தெரியாதா?யார் உன் தலைவர்?இப்படி ஆள்பிடித்து அவர்களை என்ன செய்கிறீர்கள்?அதை ஒழுங்காகா சொல்லாவிட்டால் சூடு தான்” என்றான் சந்துரு.

 ”எங்கள் மதம் ஷின்ரிக்கியோ எனும் கொரிய மதமாகும்” என்றார் பிட்சு.”மனிதர்கள் உய்வடைய லீ ஷோகோ அசாரா எனும் மானிட உருவில் இறைவன் அவதாரம் எடுத்தார்.அவர் அளித்த வேதம் அவும் ஷென்ரிக்கியோ என அழைக்கப்படும்.இதில் சேருபவர்கள் துறவறம் பூண்டு மற்ற மக்களை கடவுளின் பாதையில் திருப்பும் பணியில் ஈடுபடுவார்கள்.உலகின் அனைத்து நாடுகளிலும் நாங்கள் இருக்கிறோம்.4 கோடி பேர் எங்கள் மதத்தில் உள்ளனர்.இதில் மர்மம் எதுவும் இல்லை” என்றார் பிட்சு.

“உங்கள் சங்க வெப் சைட்டில் இருப்பதையே ஒப்பிக்காதே” என எரிச்சலுடன் சொன்னார் இளங்கோ.”நீ உன் இமெயில் ஐடியை தா.அது முடக்கப்பட்டுள்ளதா என்ன என்பதை முதலில் சரிபார்க்கிறேன்” என்றார் இளங்கோ. எரிச்சலுடன் இமெயில் விவரத்தை தந்தார் பிட்சு.

லாகின் செய்ய ஈமெயில் திறந்தது.உள்ளே உள்ள மடல்களை பிரித்து படித்து கொண்டே வந்தனர். சந்துருவின் மனைவியின் போட்டோவை ஒரு மடலில் இணைத்து தலைமை அலுவலகத்துக்கு அனுப்பியிருந்தார் பிட்சு.”புதிதாக சேர்ந்தவர்” என்ற ஒரே குறிப்புடன்.அதற்கு பதில் மடல் “ஆலயத்துக்கு அனுப்பி வைக்கவும்” என வந்திருந்தது.

பழைய மடல்களை மீண்டும் தேடியதில் இளங்கோவின் மகளுக்கும் அதே போல் மடல் பரிமாற்றம் நடந்திருந்தது தெரியவந்தது.

“பிட்சு பொய் சொல்லியிருக்கிறான்.அவனுக்கு எல்லாம் தெரியும்” என ஆவேசத்துடன் சொன்னார் இளங்கோ.

—-

அதே வினாடியில் பெங்களூரில் ஷென்ரிக்கியோ சங்க அலுவலகத்துக்கு ஒரு ஈமெயில் பறந்தது.பிட்சுவின் இமெயில் ஐடியையும்,சங்க வெப்சைட் நுழைவு அனுமதியையும் முடக்கும்படி.ஐடியை முடக்க முனைந்த கம்ப்யூட்டர் நிபுணர் அது லாகின் செய்யப்பட்டிருந்ததை கண்டார்.அந்த ஐபி அட்ரஸ் வினாடியில் போலிசுக்கு அனுப்பப்பட்டது. அடுத்த 10வது நிமிடத்தில் இளங்கோவின் வீட்டை நோக்கி போலிஸ் ஜீப் சீறிக்கொண்டு கிளம்பியது.

“என் மனைவியை எங்கே அனுப்பி வைத்தாய்?” என கோபத்துடன் பிட்சுவை கேட்டான் சந்துரு.

“சந்துரு” என்றார் இளங்கோ.”ஈமெயில் செயலிழந்து விட்டது.கண்டுபிடித்து விட்டார்கள் என நினைக்கிறேன்” என்றார் இளங்கோ.

“பிட்சு சொன்னது உண்மைதான்.போலிஸ் எந்நேரமும் நம்மை தேடி வரலாம்” என்றார்.

போலிஸ் இளங்கோவின் வீட்டுக்குள் நுழைந்தபோது அவர்கள் மூவரும் அங்கு இல்லை.ஷெட்டில் நிறுத்தியிருந்த மாருதி காரும் இல்லை.விட்டை குடைந்த போலிசார் இளங்கோவின் புகைப்படம் கிடைக்காமல் ஏமாந்தனர்.அவர் வேலை செய்த கம்பனிக்கு அவரை பற்றி விசாரிக்க கிளம்பினர்

 —

கோசல்ராம் சேட்டின் வீட்டு எதிரிலிருந்த பிள்ளையார் கோயிலுக்கு முன் ஒரு மாருதி கார் வந்து நின்றது.பகலிலேயே கூட்டமில்லாத அந்த கோயிலுக்கு இரவில் வாட்ச்மேன் கூட இல்லை.காரிலிருந்து ஒரு உருவம் கேட்டை எட்டிதாண்டி உள்ளே போனது.உண்டியல் பூட்டை சுத்தியலால் உடைத்தது.அதிலிருந்த கவரை எடுத்தது.பிள்ளையாரப்பனுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு ஓடி வந்து காரில் ஏறிக்கொண்டது.

 —-

“கவரில் என்ன இருக்கிறது?” என ஆர்வத்துடன் கேட்டார் இளங்கோ.

“வெற்றுபத்திரம் ஒன்றிலும்,பிளான்க் செக்புக்கிலும் கையெழுத்து போட்டு வைத்திருக்கிறார்.எனக்கு ஒரு கடிதமும் அவர் தம்பிக்கு ஒரு கடிதமும் எழுதியுள்ளார்.அவர் வீடு மற்றும் அனைத்து ஆஸ்திகளும் என் பெயரில் அந்த பத்திரத்தை பயன்படுத்தி மாற்றிக் கொள்ள சொல்லியிருக்கிறார்.தன் மகளை கண்டுபிடிக்கும் செலவுகளுக்கு அதை பயன்படுத்த சொல்லியிருக்கிறார்” என நெகிழ்ச்சியுடன் சொன்னான் சந்துரு.

“அந்த செக் செல்லுபடியாகாது.அவர் இறந்த செய்தி தெரிந்ததும் வங்கி கணக்கை முடக்கி இருப்பார்கள்” என சொல்லி சிரித்தார் பிட்சு. பின்சீட்டில் அவரை கட்டிபோட்டு உட்கார வைத்திருந்தார்கள்.சந்துரு அவரருகே அமர்ந்திருந்தான்.

“நண்பரை கொஞ்சம் கவனியுங்கள்” என்றார் இளங்கோ. “நீ ஏன் பொய் சொன்னாய்?” என கேட்டான் சந்துரு. “நீங்கள் போய் பார்ப்பதற்குள் ஈமெயில் ஐடி முடக்கப்பட்டிருக்கும் என நினைத்தேன். சோம்பேறிகள்.லேட்டாக முடக்கினார்கள். நான் மாட்டிக்கொண்டேன்” என சொன்னார் பிட்சு.

“சரி ஆலயத்துக்கு அனுப்பு என்றால் என்ன?நீ எதற்கு இத்தனை பெண்கள் போட்டோவை அனுப்பினாய்?யாருக்கு அந்த மடல் அனுப்பினாய்?” என கேட்டான் இளங்கோ.

“தலைமை அலுவலகத்துக்கு அனுப்பினேன்.பெண்கள் போட்டோவை அனுப்பினேன் என சொல்வது தவறு.நீங்கள் தான் பார்த்தீர்களே.பல ஆண்கள் போட்டோவையும் அனுப்பியிருக்கிறேன்.எங்கள் மடத்தில் உறுப்பினர்களுக்கு ஒரு பரிட்சை வைப்பார்கள்.அதில் நல்ல மதிப்பெண் பெற்றவர்களின் விவரங்கள் எனக்கு அனுப்பப்படும்.அவர்களின் பயோடேட்டாவை கொரியாவில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு அனுப்புவேன்.அவர்கள் அதை பரிசீலித்து சில நபர்களை கொரியாவுக்கு வந்து குருவின் அருள் பெற சொல்லி அனுப்புவார்கள். அனுப்புவோம்.அதுதான் ஆலயம். இது மிகப்பெரும் பாக்கியம்” என பரவசத்துடன் சொன்னார் பிட்சு.

“என்ன பரிட்சை வைப்பீர்கள்?” என கேட்டான் சந்துரு. “எங்கள் வேதநூலில் இருந்துதான் கேள்வி கேட்போம்.அதுபோக கடவுளின் மொழியை(கொரிய மொழி) கற்று கொடுப்போம்.மற்றபடி பொது அறிவு சம்பந்தமாக சில கேள்விகள்.வினாத்தாள் மாதிரி எங்கள் சங்க வெப்சைட்டில் இருக்கும்.பார்த்து கொள்ளுங்கள்” என்றார் பிட்சு.

“அப்போது என் மனைவியும் இவர் மகளும் இப்போது எங்கே இருக்கிறார்கள்?” என கேட்டான் சந்துரு. “வடகொரியாவில்” என சொல்லி சிரித்தார் பிட்சு.

“எப்போது திரும்பி இங்கு வருவார்கள்?” என கேட்டார் இளங்கோ.

“இதுவரை அங்கு போன ஒருவர் கூட திரும்பி வந்ததில்லை” என்றார் பிட்சு.”அங்கு என்ன நடக்கிறது என கேட்டு என்னை அடிக்காதீர்கள்.எனக்கு சத்தியமாக தெரியாது” என்றார்.

அடுத்தநாள் காலை 10 மணிக்கு இந்திய வங்கி காண்டிவெளி கிளை அலுவலகத்தை திறந்தது.10.02க்கு டிப்-டாப்பாக உடை அணிந்து இளங்கோ உள்ளே நுழைந்தார்.சேட்டின் செக்கை நிரப்பி அக்கவுண்டிலிருந்த 816,000 ரூபாயில் மினிமம் பேலன்ஸ் 1000 ரூபாய் தவிர்த்து பூராத்தொகையயும் வித்ட்ரா செய்தார்.10.15க்கு வங்கியை விட்டு வெளியேறினார். 10.30க்கு வங்கி மேனேஜர் வந்தார்.சேட்டு கோசல்ராம் முந்தைய நாள் சாயந்திரம் மரணமடைந்த செய்தியை டைனிக் ஜாக்ரனில் 10.45க்கு படித்தார்.உடனடியாக அவர் கணக்கை மூட உத்தரவிட்டார்.அரைமணி நேரத்துக்கு முன் 815,000 எடுக்கப்பட்ட செய்தி அவருக்கு தெரிவிக்கப்பட்டது.தொலைபேசியை எடுத்து போலிசுக்கு தகவல் சொன்னார் மேனேஜர்.

 —-

“வட கொரியாவுக்கு விசா எப்படி எடுப்பது?” என கேட்டான் சந்துரு.

நமட்டு சிரிப்பு சிரித்தார் பிட்சு.

“அங்கே போக விசா கிடைப்பது சிரமம்” என்றார் இளங்கோ.”அது சர்வாதிகார நாடு.அங்கே யாரும் போக மாட்டார்கள்.போனாலும் குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டுமே போக அனுமதி கிடைக்கும்.கடுமையாக உளவுபோலிஸ் வேவு பார்ப்பார்கள்.அங்குள்ள மக்கள் எலிகளையும் பூச்சிகளையும் உண்டு வாழ்கிறார்கள்” என்றார்.

“நான் படித்து படித்து சொன்னேன்.நீங்கள் யாரும் கேட்கவில்லை” என்றார் பிட்சு.”சந்துரு நான் சொல்லுகிறேன் என்று கோபித்துக் கொள்ளாதே.மனதை திடப்படுத்திக்கொள்.உன் முன்னாள் மனைவி எங்கள் சங்க நிர்வாகியை திருமணம் செய்துகொண்டார்.இப்போது அவர்கள் இருவரும் கொரியாவில் சந்தோஷமாக தம்பதி சமேதராக மதபிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்.நீ வேறு ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கொண்டு புது வாழ்க்கையை துவங்கு” என்றார் பிட்சு.

அதிர்ச்சியில் உறைந்தான் சந்துரு.அவனுக்கு பேச்சே வரவில்லை.

“நித்தம் நித்தமே பொய்யடா பேசும் மாதர் சகவாசமே விட்டு உய்யடா” என சித்தர் பாடலை உற்சாகமாக பாடினார் பிட்சு.

அஞ்சேல் எனாத ஆண்மை – II

Filed under: novel — Selvan @ 5:51 மு.பகல்

வேன் மோதி நின்றதும் அனைவருக்கும் பலமாக அடிபட்டது.முன்சீட்டிலிருந்த சந்துரு கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே போய் விழுந்தான்.

மோத்தி குண்டு துளைத்த வினாடியே உயிரை விட்டிருந்தான்.வேன் அடித்து மோதிய ஜீப்பிலிருந்த போலிசார் பலர் கீழே அடிபட்டு கிடந்தனர்.

ஐரோலி பாலத்தில் கூட்டம் அலைமோதும்.இந்த களேபரத்தில் ஏகப்பட்ட வண்டிகள் குறுக்கே ஓடியதால் இன்னொரு போலிஸ் ஜீப்பில் இருந்தவர்களால் மானாவாரியாக சுட முடியவில்லை.ஆனால் இவர்களை நோக்கி ஓடிவந்தனர். துப்பாக்கி சத்தம் திடீரென கேட்டது.சந்துருவின் வேனிலிருந்து யாரோ போலிசை நோக்கி சுட்டனர்.குறி தவறினாலும் போலிஸ் உஷாராக அதுபோதுமானதாக இருந்தது.

அவர்களிடம் கட்டை துப்பாக்கிகள் இருந்தன.பதுங்க இடம் தேடி அவர்கள் ஓட அதற்குள் இரண்டு போலிஸார் குண்டடி பட்டு விழுந்தனர். துப்பாக்கி வெடித்ததும் அங்கு மக்கள் சிதறி ஓடினர்.

வேன் கதவை திறந்து பிட்சுவை தூக்கி தானே ஆற்றில் வீசினார் இளங்கோ.அவரும் ஆற்றில் குதித்தார். சந்துரு எழுந்தான்.உடலெங்கும் வலி.பட்டகாலிலே படும் என்பதுபோல் அடிபட்ட காலில் மீண்டும் வலி.கையில் எந்த ஆயுதமும் இல்லை.போலிஸ் வேனை சுற்றி வளைத்து சுட்டுக்கொண்டிருந்தனர்.சுற்றிலும் மக்கள் சிதறி ஓடினர்.இனி செய்ய ஏதுமீலை என உணர்ந்த சந்துரு மக்களோடு மக்களாக அவர்களோடு சேர்ந்து ஓடினான்.தானே பெலாபூர் ரோட்டுக்கு ஓடி நின்றான்.உடலெங்கும் ரத்தம்,காயம்.ஆட்கள் அவனை வித்யாசமாக பார்த்தனர்.ஆனால் விடு விடு என நடந்து போனான்.

இளங்கோ தப்பியது அவனுக்கு தெரியாது.வேனில் இருந்தவர்கள் என்ன ஆனார்களோ என்ற பீதி வாட்டியது. டெலிபோன் பூத்தில் காசை போட்டு சேட்டுக்கு தகவல் சொன்னான்.மகன் இறந்துவிட்டான் என்பதை பதட்டத்தில் சொல்லி விட்டான்.சொன்னபின் நாவை கடித்து கொண்டான். “மகனும் போய்விட்டான்.மகளும் போய்விட்டாள்.வேனை அடையாளம் கண்டுபிடித்து போலிஸ் வருவது நிச்சயம்.நான் ஓடி தப்பிக்க முடியாது.வயதாகிவிட்டது” என்றார் சேட்டு.”முடிந்தால் என் மகளை அங்கிருந்து மீட்டு என் தம்பி வீட்டில் விட்டு விடு.இல்லாவிட்டால் விதி விட்ட வழி” என்றார் அவர்.”என் வீட்டு எதிரில் உள்ள பிள்ளையார் கோயில் உண்டியலில் ஒரு பொட்டலத்தை போடுகிறேன்.உனக்கு அது மிக உதவும்.அடுத்த திங்கட்கிழமைக்குள் உண்டியலை உடைத்து அதை எடுத்துக்கொள்.இல்லாவிட்டால் அது பிள்ளையாருக்கு போயிடும்.உண்டியலை திங்களன்று தான் திறப்பார்கள்” என்றார் சேட்டு.போனை வைத்து விட்டார்.

சந்துரு வெளியே வந்தான்.எங்கே போவது என தெரியவில்லை.அவன் அடையாளம்,பேர்,ஊர் தெரிந்தவர் இளங்கோ ஒருவர்தான்.அவரை தவிர வேனில் இருந்த அனைவருக்கும் புனை பெயர் ஒன்றை தான் சொல்லி இருந்தான்.இளங்கோ அப்போது புனை பெயர் சொல்ல சொன்னது எவ்வலவு உதவியானது என நினைத்துக்கொண்டான்.ஆனால் இளங்கோ மாட்டினால் அவனும் மாட்டுவது உறுதி. அவன் தங்கி இருந்த விடுதிக்கு சென்று அவசர அவசரமாக இடத்தை காலி செய்தான்.போலிஸ் அங்கு வந்தால்,விசாரித்தால் அவன் அட்ரஸ் கிடைப்பது உறுதி.என்ன செய்வது என யோசித்துக்கொண்டே ஓட்டலை விட்டு வெளியே வந்தான்.

“சாப்..போன்” என சத்தம் கேட்டது.ஓட்டல் பையன் வந்து அழைத்தான்.போய் போனை எடுத்தான்….இளங்கோ.

“இங்கே தான் இருக்கிறாயா?ஒரு நப்பாசையில் தான் அழைத்தேன்.வேனில் இருந்த அனைவரும் இறந்துவிட்டனர்.இருவர் பிடிப்பட்டனர்.பிட்சுவை இழுத்துக்கொண்டு நான் தப்பி விட்டேன்.என் வீட்டில் கட்டி வைத்திருக்கிறேன்.உடனே கிளம்பி வா” என்றார்.

நிம்மதி பெருமூச்சு விட்டான் சந்துரு.புது நம்பிக்கை அவன் மனதில் பிறந்தது. இளங்கோ தவிர வேனில் இருந்த யாருக்கும் அவன் அடையாளம் தெரியாது.இந்த ஓட்டல் ரெஜிஸ்டரில் மட்டுமே அவன் அட்ரஸ் இருந்தது.ஆனால் போலிஸ் இங்கு மோப்பம் பிடித்து வரப்போவதில்லை. ஆக இப்போது சந்துரு சுதந்திர மனிதன். ஆனால் அவன் மனைவி எங்கோ மாட்டிக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு என்ன ஆச்சு என்பது முதலில் தெரியவேண்டும்.அது தெரிந்த ஆள் அந்த பிட்சு தான். “பிட்சு …உனக்கு சாவு என் கையால் தான்” என சந்துரு முணுமுணுத்தான்.

டாக்ஸி பிடித்து இளங்கோ வீட்டுக்கு போனான்.வழியில் மாலை செய்தித்தாளில் “மும்பையில் துப்பாக்கி சண்டை” என கடைகளில் தொங்க நிறுத்தி பேப்பர் வாங்கினான். வேனில் இருந்தவர்களில் இருவர் செத்துவிட்டனராம்.மூவர் பிடிபட்டனராம்.விசாரனை நடக்கிறதாம்.அவர்கள் அடிதாங்க மாட்டார்கள் என்பது சந்துருவுக்கு தெரியும்.சங்க உறுப்பினர்கள் மற்றவர்கள் பேரை சொல்லிவிடுவார்கள்.சேட்டையும் சீக்கிரம் பிடித்து விடுவார்கள்.சங்கம் மொத்தமும் காலி….இவனையும் இளங்கோவையும் தவிர.

“விடமாட்டேன்…உங்கள் ஒவ்வொருவர் வீட்டு பெண்ணையும் மீட்பேன்” என சொல்லிக்கொண்டன் சந்துரு.அசாத்தியமான உறுதி அவன் மனதில் வந்திருந்தது.அவன் கண்ணில் கொலைவெறி தாண்டவமாடியது.சாகதுணிந்தவனுக்கு வரும் உறுதி அப்போது அவன் மனதில் நிரம்பியது.

—————————————

சேட்டு கோசல்ராம் பிள்ளையார் கோயிலுக்கு போனார்.ஒரு கவரை சந்துருவின் புனை பெயர் எழுதி உண்டியலுக்குள் திணித்தார்.கையோடு கொண்டு சென்ற ஜிலேபியை விழுங்கினார்.உள்ளே கலந்திருந்த விஷத்தால் ஜிலேபி கசந்தது.தொந்தியப்பனுக்கு ஒரு கும்பிடு போட்டார்.தள்ளாடியபடி வெளியே நடந்து வந்தார்.தலை சுற்றியது.நடைபாதையில் அப்படியே உட்கார்ந்தார். தன் வீட்டு முன் போலிஸ் ஜீப் பிரேக் போட்டு நிற்பது போல் காட்சி தெரிந்தது.அது நிஜமா பிரமையா என தெரியவில்லை.கண்னை கசக்கினார்.

சின்ன வயது மோத்தியும்,மீராவும் கண்ணில் தெரிந்தனர்.இதுவும் நிஜமா பிரமையா….. “மோத்தி..மீரா.. “என முணுமுணுத்தார் சேட்டு.தங்கை மேல் அவ்வளவு பாசம் மோத்திக்கு.”மீரா கே லியே குச்ச் பீ கரேகா” (மீராவுக்காக எதையும் செய்வேன்)என அடிக்கடி சொல்லுவான்.அது பொய்யில்லை.உண்மைதான்….

மகனையும் மகளையும் நினைத்தபடி கோசல்ராம் சேட் சந்தோஷமாக செத்து போனார்.

 ——————————————

சந்துருவின் டாக்ஸி இளங்கோ வீட்டை நோக்கி சென்றது. இளங்கோ வீட்டில் பிட்சு கண்விழித்தார்.அவர் எதிரே அவரை உற்று பார்த்தபடி இளங்கோ அமைதியாய் அமர்ந்திருந்தார்.”குட் ஈவினிங்” என்று சொன்னார் இளங்கோ

(தொடரும்)

பழைய இடுகைகள் »

Theme: Banana Smoothie. வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Follow

Get every new post delivered to your Inbox.