என் ஜூனியர் மாணவன் ஒருவன் இந்தியன். ஆவலோடு அவனை வரவேற்ற போது இந்தியில் பேசத் துவங்கி விட்டான். எனக்கு இந்தி தெரியாது என்று சொன்னவுடன் “தேசிய மொழி தெரியாது என சொல்வதற்கு வெட்கமாக இல்லையா?” என்று கேட்டான். “தேசிய மிருகம் புலியை உன் வீட்டில் வளர்க்கிறாயா?தேசிய விளையாட்டு ஆக்கியை தினமும் ஆடுகிறாயா?” என்று கேட்டு அவன் நாவை அடக்கினேன். என் நாட்டுப்பற்றை அளக்க இந்தி பேசுவதுதான் அளவுகோலா?
பல இடங்களில் இதுபோல் நடந்திருக்கிறது. இஸ்கான் கோயிலுக்கு போனால் சிலர் திடீரென்று சரளமாக இந்தியில் பேசுவார்கள். ‘இந்தி தெரியாது’ என்று சொன்னால் முகம் சுளிப்பார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. அமெரிக்காவில் இருந்துகொண்டு பட்லர் இங்கீஷை வைத்துக்கொண்டு பிழைப்பை நடத்துகிறவர்கள் பலர்.
பள்ளியில் சிறுவயதில் என் அப்பா என்னை இந்தி வகுப்பில் சேர்த்தார். கடுங்கோபம் கொண்ட என் அம்மா என் பள்ளி ஆசிரியரிடம் சண்டை பிடித்து என்னை தமிழ் வகுப்பில் சேர்த்தார்கள்.தமிழ் படிக்க தெரிந்தால் தான் நான் திருப்பாவை,நாலாயிர பிரபந்தம் படிப்பேன் என்பது அவர்கள் வாதம்.”இந்தி படிக்காத இவன் உருப்பட மாட்டான்” என்று என் அப்பா சாபம் கொடுத்தார்.(இப்போதும் என்னை உருப்பட்டவன் என்று அவர் ஒத்துக்கொள்வதில்லை என்பது வேறு விஷயம்)
இந்தி படிக்க வேண்டுமென்போர் தாராளமாக பள்ளியில் விருப்பபாடமாக படித்துக் கொள்ளலாம். நான் அதை ஆதரிக்கிறேன். ஆனால் கட்டாயப்படுத்தி மாணவர்கள் மேல் இந்தியை திணிப்பதை நான் வெறுக்கிறேன்.எதிர்க்கிறேன்.
ஆமை புகுந்த வீடும், இந்தி புகுந்த மாநிலமும் உருப்பட்டதாய் சரித்திரமே இல்லை. இந்தி புகுந்ததால் மராத்தி, குஜராத்தி, பன்சாபி, ராஜஸ்தானி, போஜ்புரி போன்ற மொழிகளில் திரைப்படத் துறை நசிந்து அழிந்து விட்டது. கர்நாடகாவில் கூட இப்போது அது நடக்கத் துவங்கி விட்டது.
இந்தி திணிப்பு பல பெயர்களில் மறைமுகமாக நடக்கிறது.வங்கி அலுவலர்கள் இந்தியில் கையெழுத்து போட வேண்டுமென்றெல்லாம் உத்தரவுகள் இருக்கிறதாம். தமிழ்நாட்டில் இருக்கும் வங்கி ஊழியன் எதற்கையா இந்தியில் கையெழுத்திட வேண்டும்? பல தேர்வுகள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே நடக்குமாம். ஏன் தமிழ் என்ன இளிச்சவாய் மொழியா?
இந்தி விஷயத்தில் திமுக, அதிமுகவின் பின் வரும் கருத்துக்களை நான் மனபூர்வமாக ஆதரிக்கிறேன்.
1.தமிழக பள்ளிகளில் இந்தி கட்டாயப்பாடமாக கூடாது.விருப்பப் பாடமாக மட்டுமே இருக்கலாம்.
2.இந்தியை கட்டயாமாக சொல்லிதருவதால் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் துவக்க எம்.ஜி.ஆர் அரசு மறுத்துவிட்டது. அது மிக சரியான முடிவு.இந்தியை கட்டாயப் பாடமாக இருப்பதை ரத்து செய்துவிட்டு நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் துவக்க வேண்டும்.
3.அரசு அலுவல் மொழியாக ஆங்கிலம் மட்டுமே இருக்க வேண்டும்.இந்தியை தூக்க வேண்டும்.
4.மறைமுகமாக இந்தியை திணிக்கும் வேலைகள் கூடாது.
தில்லியில் நினைத்து நினைத்து தேசிய மொழியை மாற்றுவார்கள். எத்தனை தேசிய மொழிகளை தமிழன் கற்பது? இப்போது இந்தி,60 வருடம் முன்பு ஆங்கிலம்,அதற்கு முன் உருது, அதற்கு முன் பாரசீக மொழி, அதற்கு முன் சமஸ்கிருதம் என 500 ஆண்டுகளுக்கு ஒரு தேசிய மொழியை இவர்கள் வைத்திருப்பார்கள். இதை எல்லாம் நாம் கற்றுக்கொண்டிருக்க வேண்டுமா?
இதுபோக ஒரு விண்ணப்பம். வடநாட்டில் இருப்போருக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுங்கள்.உலகம் பூராவும் இந்தியை வைத்துக்கொண்டு பிழைப்பை ஓட்டிவிடலாம் என்று நினைக்கிறார்கள்.தயவு செய்து அமெரிக்கா வரும்போது ஆங்கிலம் கற்றுக்கொண்டு வாருங்கள்.பட்லர் இங்கிலீஷ் பேசி இந்தியாவின் மானத்தை கப்பல் ஏற்றாதீர்கள்.

