உலகின் புதிய கடவுள்

ஆகஸ்ட் 31, 2007

Peace of Civilizations

Filed under: கட்டுரை, தமிழ்ப்பதிவுகள், பொது — Selvan @ 12:42 மு.பகல்

Peace of Civilizations

ராபின்சன் க்ரூசோ (1997) என்ற திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன்.நாவலுக்கும் இதற்கும் தான் எத்தனை வித்தியாசம்?

டேனியல் ஃடீபோவின் ராபின்சன் க்ரூசோ (1719) நாவல் வெள்ளை இனம் உலக ஆதிக்கம் பெற துவங்கியிருந்த கால கட்டத்தில் எழுதப்பட்ட நாவல்.ராணுவம், கலாச்சாரம்,விஞ்ஞானம் என அனைத்து துறைகளிலும் பிரிட்டன் கொடிகட்டி பறந்த காலம்.உலகெங்கும் சென்று தேசங்களை பிடித்து, மற்ற இனங்களையும், கலாச்சாரங்களையும் வென்று அதன் வளங்களை பிரிட்டனின் நலனுக்கு பயன்படுத்தும் மனோபாவம் நிலவிய காலம்.

அந்த காலக்கட்டத்தில் எழுதப்பட்ட புகழ்மிக்க நாவல் ராபின்சன் க்ரூசோ (1719). இதை டேனியல் டிஃபோ எழுதியபோது பைபிளுக்கு அடுத்து உலகெங்கும் அதிகம் அச்சிடப்பட்ட புத்தகமாக இது விளங்கியது.ஆங்கிலத்தின் முதல் நாவல் என்று இதை சொல்வார்கள்.வெளிவந்த உடனே மாபெரும் ஹிட் ஆகிய இந்த புத்தகம் 19ம் நூற்றாண்டின் இறுதியில் உலகின் பெரும்பாலான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு விட்டது.ஆங்கில இலக்கியத்தை உலகெங்கும் கொண்டு சேர்த்த பெருமை இப்புத்தகத்துக்கு உண்டு.கிட்டத்தட்ட கல்ட் ஸ்டேடசை அடைந்த இப்புத்தகம் ஏராளமான திரைப்படங்களையும், நாவல்களையும் ( எ.கா: ஸ்விஸ் பேமிலி ராபின்சன்) உருவாக்கியது.

ராபின்சன் க்ரூசோ நாவலில், ஆபிரிக்காவிலிருந்து அடிமைகளை கொண்டுவரும் பயணத்தில் இறங்கும் ராபின்சன் க்ரூசோ அந்த கப்பல் விபத்தில் சிக்கியதால் ஒரு தீவில் 28 ஆண்டுகள் வசிக்கிறான். தீவில் அவனுக்கு அதீத மதப்பற்று வந்துவிடுகிறது. ப்ரைடே என்ற மனித மாமிசம் தின்னும் ‘காட்டுமிராண்டியை’ காப்பாற்றி அவனுக்கு ஆங்கிலமும்,’ நாகரிகமும்’ கற்றுத்தந்து அவனை கடவுளின் பாதைக்கு திருப்புகிறான். பிறகு 28 ஆண்டுகள் கழித்து ப்ரைடேவின் உதவியுடன் தப்பி ஊர் திரும்புகிறான்.

டீஃபோவின் க்ரூசோவுக்கு அடிமைகள் வைத்திருப்பது சரியேன்ற காலனிய மனப்போக்கு இருந்தது.க்ரூசோ நாவலை ஆராய்ந்த காரல் மார்க்ஸ் ‘அந்த தீவில் க்ரூசோவிடம ஏராளமாக பணமும்,தங்கமும் இருந்த்ன.ஆனால் க்ரூசோவுக்கு பணத்தை விட அடிமைகளே தேவைப்பட்டனர். பணத்தை சுரண்டுவதை விட மனித வளத்தை சுரண்டுவதிலேயே லாபம் அதிகம் என்பதை முதலாளித்துவம் உணர்ந்த தருணத்துக்கு உதாரணமாக’ இதை மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.அதேபோல் க்ரூசோ ஒரு ‘காட்டுமிராண்டியை’ பிடித்து அவனை ‘நாகரீகப்படுத்தி’ தனக்கு அடிமையாக்கி கொள்கிறான்.அதனால் இது பிரிட்டானியரின் காலனிய மனப்போக்கையும், ஒரே தீவில் வசிக்கும் வெறும் இரு மனிதர்களுக்கிடையே கூட வர்க்க பேதம் நிலவுவதையும்’ காட்டுவதாக எழுதுகிறார்.

பியர்ஸ் பிராஸ்னன் நடித்த ராபின்சன் க்ரூசோ (1997) இந்த காலனிய மனபோக்கை தகர்த்து எறிகிறது.ப்ரைடேவை சந்திக்கும் முன் க்ரூசோ காலனியவாதியாகவும், இனவாதியாகவும், மதவாதியாகவும் இருக்கிறான்.ப்ரைடேவை சந்திக்குமுன் “ஏன் இந்த தீவில் என்னை மாட்டிவிட்டாய் கடவுளே” என கேட்கிறான்.அந்த தீவின் தனிமையை எதிர்கொள்ள அவனுக்கு இறைவனின் துணை தேவைப்படுகிறது.மதப்பற்று அவ்வளவு இல்லாத க்ரூசோ அதன்பின் மதப்பற்று கொள்கிறான். ப்ரைடேவை சந்தித்தபின் அவனை “இறைவனின் வழிக்கு” கொண்டுவரவே தன்னை இறைவன் இந்த தீவுக்கு கொண்டுவந்து சேர்த்ததாக கூட நம்புகிறான். ப்ரைடேவை “heathen” என கூட ஒருதரம் விளிக்கிறான் க்ரூசோ.

காட்டுமிராண்டியான ப்ரைடேவை அடிமைப்படுத்தும் பணி அடுத்து துவங்குகிறது.ப்ரைடேவை சங்கிலியால் கட்டிபோடுகிறான் க்ரூசோ.தன்னை அவன் “மாஸ்டர்” என அழைக்க வேண்டும் என்கிறான்.”மாஸ்டர்” என்றால் என்ன பொருள் என புரியாத ப்ரைடே அவனை மாஸ்டர் என அழைக்கிறான்.ப்ரைடேவுக்கு ஆங்கிலம் கற்றுதரும் பணி அடுத்து துவங்குகிறது.ஆங்கிலம் கற்று கொடுத்த பின் அடுத்து இறைவனை அறிமுகப்படுத்தும் பணி துவங்க வேண்டாமா?

“உன் கடவுள் யார்?” என ப்ரைடேவிடம் வினவுகிறான் க்ரூசோ.

“என் கடவுள் மகாயா எனும் முதலை” என ப்ரைடே பெருமிதத்துடன் கூறுகிறான்.”மகாயா வெறும் முதலை. உன் கடவுள் கர்த்தரே” என க்ரூசோ பதிலுரைக்க ப்ரைடே ஆவேசத்துடன் அதை மறுக்கிறான்.”மாகாயாவை என்னால் காட்ட முடியும்.உன் கடவுளை உன்னால் காட்ட முடியுமா?” என ப்ரைடே கேட்கிறான். க்ரூசோ அவனுக்கு பைபிளை தர, அதில் சில பக்கங்களை தெரியாமல் கிழித்து விடுகிறான் ப்ரைடே. ஆத்திரமடைந்த க்ரூசோ அவனுடன் சண்டை பிடிக்க ப்ரைடே கோபத்துடன் வெளியேறுகிறான்.

மார்க்சின் அதே வரிகளை க்ரூசோ உச்ச்ரிக்கிறான்.”ஒரே தீவில் வசிக்கும் இருவரிடயே கூட மதசண்டையா?” என்று.ப்ரைடேவிடம் சென்று மன்னிப்பு கேட்டு இருவரும் மீண்டும் நண்பர்களாகின்றனர். க்ரூசோவின் நாய் இறந்து விடுகிறது. அதற்காக பிரார்த்திக்காமல் அழுகிறான் க்ரூசோ.”நாய்க்காக உன் கடவுளிடம் பிரார்த்தனை செய்” என்கிறான் பிரைடே.”நாய்க்கு ஆத்மா இல்லை.மனிதனுக்குதான் ஆத்மா உண்டு” என்கிறான் க்ரூசோ

அதை மறுதலிக்கும் ப்ரைடே மகாயாவிடம் நாயின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறான். க்ரூசோவின் மனம் மாறுகிறது.

“இறைவனை அடைய ஒரே வழி தான் உண்டென நம்பியிருந்தேன்.இப்போது அந்த நம்பிக்கக என்னிடமிருந்து விடை பெற்று சென்றுவிட்டது” என எழுதுகிறான் க்ரூசோ.

கடைசியில் ப்ரைடேவின் ‘காட்டுமிராண்டி’ இனத்தின் நடுவே மாட்டிகொள்கிறான் க்ரூசோ.அவனை கொல்ல அந்த இனத்தவர் முற்படுகின்றனர்.”வெள்ளையர் என் கிராமத்தை தாக்கி என் மனைவியை கற்பழித்து என் மகனை அடிமையாக கொண்டு சென்றுவிட்டனர்.அதனால் தான் கிராம மக்கள் உன்னை கொல்ல முற்படுகின்றனர்” என்கிறான் பிரைடே. க்ரூசோ கொல்லப்படவிருக்கும் தருணத்தில் பிரைடேவை சுட்டுகொன்று, க்ரூசோவை விடுவிக்கும் வெள்ளையர் அந்த காட்டுமிராண்டி கும்பலை விட மோசமாக நடந்து கொள்கின்றனர். அந்த கிராமம் முழுவதையும் தீக்கிரையாக்கி சங்கிலி கட்டி அந்த மக்களை அடிமைகளாக இழுத்து செல்கின்றனர்.பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கின்றனர்.

அந்த காட்டுமிராண்டி இனத்தை விட தன் இனம் எந்த விதத்திலும் மேம்பட்டதல்ல, அவன் நாகரீகத்தை விட தன் நாகரிகம் எந்த விதத்திலும் உயர்ந்ததல்ல என அறிகிறான் க்ரூசோ. அவனது இனவாதமும், மதவாதமும்,காலனியவாதமும் அத்துடன் அழிந்துவிடுகிறது.புத்தம்புது மனிதனாக இங்கிலாந்துக்கு திரும்புகிறான் க்ரூசோ.தன் காதலியை திருமணம் செய்துகொண்டு புதுவாழ்வை துவக்குகிறான்.

நாவலை ஒப்பிடுகையில், ப்ரைடே திரைப்படத்தில் எழுச்சி அடைந்த கறுப்பினத்தின் குறியீடாக இருக்கிறான்.”நான் உனக்கு அடிமையாக இருக்க மாட்டேன்” என தெளிவாக க்ரூசோவிடம் சொல்கிறான். க்ரூசோவுக்கு சரிக்கு சரி சமமான ந்ண்பனாகத்தான் இருக்க விரும்புகிறான். கடைசிவரை முதலை கடவுள் மீது வைத்த அன்பை அவன் மாற்றி கொள்வதில்லை. க்ரூசோவை “மாஸ்டர்” என அழைக்க மறுக்கிறான். கடைசிவரை அவன் க்ரூசோவின் கலாச்சார உடைகளை (பேண்ட்,ஷர்ட்) அணிந்து கொள்வதில்லை. சாகும் கடைசி நிமிடத்திலும் ஆதிவாசி உடைகளையே அணிந்து முகத்தில் பெயிண்டு அடித்துகொள்கிறான்.

ராபின்சன் க்ரூசோ (1719) நாவலில் க்ரூசோவை சந்திக்கும் ப்ரைடே அவன் காலை எடுத்து தனது தலையில் வைத்து கொள்கிறான்.ராபின்சன் க்ரூசோ’ல் (1997) ப்ரைடே க்ரூசோவின் காலை எடுத்து தலையில் வைப்பது போல் நடித்து அவனை கீழே தள்ளுகிறான்.

ராபின்சன் க்ரூசோ (1719) எழுச்சி அடைந்த வெள்ளை இனத்தின் குறியீடு என்றால் ராபின்சன் க்ரூசோ (1997) மனம் திருந்திய வெள்ளை இனத்தின் குறியீடு. ராபின்சன் க்ரூசோ (1997) இரு மனிதர்களின் கதை அல்ல. புதிய பொன்னுலகை உருவாக்க விழையும் இரு இனங்களின் கதை.

அஞ்சேல் எனாத ஆண்மை-6

Filed under: novel — Selvan @ 12:20 மு.பகல்

வடகொரிய தலைநகர் யோங்யாங், தேடாங் நதிக்கரையில் அமைந்த நகரம்.வடகொரியா சபிக்கப்பட்ட தேசம்,ஏழ்மையில் உழலும் தேசம் என இளங்கோவும்,சந்துருவும் கேள்விப்பட்டிருந்தனர்.ஆனால் யாங்க்யாங்கில் இறங்கியதும் அது தெரியவில்லை.

முதலில் அவர்களை தாக்கியது கடும்குளிர்.பிப்ரவரியில் பூஜ்யம் டிகிரி செல்சியசுசுக்கு கீழே போகும் குளிர்.என்னதான் அதற்கேற்ற உடைகளை அணிந்திருந்தாலும் வாழ்வில் முதன்முறையாக அப்படி ஒரு குளிர் தாக்கும்போது நடுக்கம் வரத்தான் செய்யும். யாங்யாங் நகர தெருக்களில் வாகனம் போனபோது ஏதோ ஏழ்மை கண்ணுக்கு தெரியவே இல்லை.சாங்வாங் தெரு உலகின் எந்த நகரத்துடனும் போட்டியிடும் வகையில் பெரிய கட்டிடங்களுடன் தான் இருந்தது.ஆனால் தெருக்களில் கார்கள் சுத்தமாக காணப்படவில்லை.சைக்கிள் தான் மக்களின் வாகனமாக காணப்பட்டது.

வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இளங்கோவிடம் பிட்சு மெதுவாக “நீ இதற்கு முன் என்ன வேலை செய்து கொண்டிருந்தாய்?” என கேட்டார் “டாக்டர்,பாலியல் நிபுணர்” என்றார் இளங்கோ. “பழனி வைத்தியர் போல” என முணுமுணுத்துக்கொண்டார் பிட்சு.

“நீ..” என சந்துருவை பார்த்து கேட்டார். “பைப் கம்பனி சேல்ஸ்மேன்.” என்றான் சந்துரு.”படிப்பு பி.காம்” என்றான்.பாதியில் படிப்பை விட்டதை சொல்லவில்லை.

 ”இந்த புத்தகங்களை வைத்துகொள்ளுங்கள்.உதவும்” என்றார் பிட்சு.30 நாட்களில் கொரிய மொழி எனும் புத்தகம். இவர்கள் போன வேன் யாங்யாங்கின் குயோக் எனும் இடத்தில் சென்று நின்றது.அனைவரும் இறங்கி அங்கிருந்த கோயிலுக்குள் நுழைந்தார்கள்.

அடுத்த நாள் காலையில் தலைமை பிட்சு அவர்களை சந்திப்பார் என்று சொல்லப்பட்டது. அன்றிரவு பிட்சு ரகசிய மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்தார்.அனைவரும் பிட்சுவின் அறையில் கூடினர்.

 ”சில விஷயங்களை முதலில் தெளிவுபடுத்த வேண்டும்” என்றார் பிட்சு.”நீங்கள் இருவரும் சிவிலியன்கள்.போர்,சண்டை,உளவு,ரத்தம் என எந்த அனுபவமும் இல்லாதவர்கள்.அதனால் சில விஷயங்களை மறைத்தேன்.ஆனால் ஒரே இரவில் 16 கொலைகளை செய்ததை கண்டு அசந்து போய்தான் கூட்டிவந்தேன்” என்றார்.

“நீங்கள் எல்லாரும் யார்” என்று கேட்டான் சந்துரு.

“நாங்கள் இந்த மத ஸ்தாபனத்தில் நடப்பதை உளவறிய வந்தவர்கள்.எந்த நிறுவனத்தை சார்ந்தவர்கள் என்பது இப்போதைக்கு ரகசியமாக இருக்கட்டும்” என்றார் பிட்சு.

 ”உங்கள் பெயரையாவது சொல்லுங்கள்” என்றார் இளங்கோ.

“பெயரா முக்கியம்” என்றார் பிட்சு.”அரவிந்த்சாமி என வைத்துகொள்ளுங்களேன்” என்றார்.

“உங்கள் முகம் ஆந்தை மாதிரி இருக்கு.வேணும்னா ஆந்தை சாமி என கூப்பிடுகிறேன்” என்றார் இளங்கோ.

“எப்படியோ கூப்பிட்டுக்கொள்ளுங்கள்” என்றார் அரவிந்சாமி.

“நீங்கள் சி.பி.ஐ.யா?” என கேட்டான் சந்துரு. பதிலே சொல்லாமல் அடுத்த விஷயத்துக்கு தாவினார் அரவிந்த்சாமி.

 ”இந்த ஸ்தாபனத்தில் நம் உளவாளிகள் கொரியாவுக்குள் கால் வைத்ததே இல்லை.முதல் முதலாக நாம் தான் வந்திருக்கிறோம்.பல இடங்களுக்கும் நாம் பிரித்து அனுப்பப்படுவோம்.இந்த சபிக்கப்பட்ட தேசத்தில் தொலைபேசி கூட கிடையாது.ஒரு தரம் பிரிந்தால் நாம் மறுபடி தொடர்பு கொள்ள எந்த வழிமுறையும் கிடையாது.நீங்கள் செய்ய வேண்டியது ஒழுங்காக அவர்கள் சொல்லும் வேலையை செய்ய வேண்டியது.என்ன நடக்கிறது என்பதை கவனித்துக்கொண்டே வாருங்கள்.என்ன கோல்மால் செய்தாவது இந்த அமைப்பின் மேல் மட்டத்துக்குள் நம்மில் ஒருவராவது போய்விடவேண்டும்.” என்றார்.

“கொரியாவில் முக்கியமாக சொல்ல வேண்டியது உன் வேலையை பார் என்பதே.இங்கு பல அடாவடிகள் நடக்கும்.கண்முன் கொலை செய்வார்கள்.கண்டுகொள்ள கூடாது.ஏழ்மை கண்னை குத்தும்.மனம் இரங்கி எதையும் செய்துவிடக்கூடாது.உணவு இங்கே கிடைப்பது மிக அரிது.ஆனால் மத நிறுவனத்தில் இருக்கும் நமக்கு சிக்கலில்லை.ஆனால் எக்காரணம் கொண்டும் பொதுமக்களோடு நெருங்கி பழகாதீர்கள்” என்றார் அரவிந்த்சாமி.

“என் மனைவியை பார்க்கவேண்டும்” என்றான் சந்துரு. “அவர் எங்கிருக்கிறார் என்பதை மேல்மட்டத்தில் நம்மில் யாரவது நுழைந்தால் தான் கண்டுபிடிக்க முடியும்” என்றார் அரவிந்த்சாமி.

“கல்யாணமானது என்றீர்களே.அது பொய்தானே” என்றான் சந்துரு.

கண்ணை நேருக்கு நேர் பார்த்து பொய் சொல்வது சாத்தியமில்லை என்பார்கள்.ஆனால் அரவிந்த்சாமி அதில் கை தேர்ந்தவராக இருந்தார்.

“பொய் தான் சொன்னேன்.மன்னித்துவிடு” என்றார்.

சந்துருவின் முகம் மலர்ந்தது. அரவிந்த்சாமியின் முகம் வழக்கம் போலவே ஒரு விஷமச்சிரிப்புடன் இருந்தது.

அடுத்த நாள் காலையில் தலைமை பிட்சு அவர்கள் அனைவரையும் சந்தித்தார்.நல்ல ஆங்கிலத்தில் பேசினார். “உங்கள் அனைவருக்கும் ஒரு வருத்தமான செய்தி” என்றார்.”நீங்கள் வந்த ஒரிசா ஆலயம் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் தீக்கிரையாக்கப்பட்டு அங்கிருந்த 20 பிட்சுகளும் இறந்துவிட்டனர்” என்றார்.

“அடடா,,அந்தகோ” என போலியாக அனுதாபப்பட்டார் அரவிந்சாமி. சந்துரு சிரிப்பை அடக்க மிகவும் கஷ்டப்பட்டான்.

“உங்கள் அனைவரை பற்றிய விவரங்களும் அந்த ஆலயத்தில் ரெகார்டில் இருந்தன.அழிந்துவிட்டன.புதிதாக உங்கள் பயோடேட்டாவை மீட்டிங் முடிந்ததும் எழுதி கொடுங்கள்” என்றார் தலைமை பிட்சு. அடுத்த விஷயத்துக்கு போனார்.

“மனிதனுக்கு சேவை செய்வது இறைவனுக்கு சேவை செய்வது போன்றது என நம் வேதம் சொல்கிறது.இறைபூமியாம் கொரியாவில் கூடியுள்ள நீங்கள் முக்தி பெற வேண்டுமானால் முதலில் மக்கள் பணியில் ஈடுபடவேண்டும்.உதாரணத்துக்கு பள்ளிகுழந்தைகளுக்கு பாடம் சொல்லிதருதல்,சேரிகளை சுத்தம் செய்தல்,சுகாதார கல்வியை பரப்புதல் ஆகியவை.யார் யார் இதற்கு தயாராக இருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அனைவரும் கை உயர்த்தினர்.

 —————————–

“அம்மா..” என அலறினான் அந்த கொரிய பெண்.வலிதாங்க முடியவில்லை.குடித்திருந்த மதுவையும் மீறி வலி விண்,விண் என உடல் எங்கும் ஊடுறுவியது. “பொறுத்துக்கொள்” என வேதனையுடன் சொன்னார் இளங்கோ.தன் வாழ்வில் அவர் செய்யும் முதல் சிசேரியன் ஆபரேஷன் அது.அந்த ஆஸ்பத்திரியில் எந்த மருந்தும் இல்லை.உயிர் போகும் நிலையிலிருந்த அந்த கர்பிணிப்பெண்ணுக்கு மயக்க மருந்து இல்லாததால் ஏராளமான மதுவை ஊற்றிக்கொடுத்து ஆபரேஷன் செய்தார். அவள் மீண்டும்,மீண்டும் அலறினாள். சந்துரு மதுபாட்டிலை எடுத்து அவள் வாயில் ஊற்றினான்.ஆனால் அவளால் வலியை கட்டுப்படுத்த முடியவில்லை.

குழந்தை பிறந்து அதன் அழுகை கூட காதில் விழவில்லை. அதிர்ஷட்வசமாக வலியிலேயே மயக்கம் போட்டு விட்டாள்.

ஆபரேஷன் முடிந்து கண்ணீரோடு வெளியே வந்தான் சந்துரு.இந்த 3 மாதத்தில் இதுபோல் பல சம்பவங்களை பார்த்துவிட்டான்.மருந்து இல்லாமல்,எந்த உபகரணமும் இல்லாமல் அந்த மருத்துவமனையை அவனும் இளங்கோவும் அரவிந்சாமியும் நடத்திக் கொண்டிருந்தார்கள். தினமும் கணக்கு வழக்கில்லாமல் நோயாளிகள் எலும்புக்கூடாய் வந்து நின்றார்கள். அவர்கள் பயோடேட்டாவில் மருத்துவமனை அட்டெண்டென்ட் என எழுதி கொடுக்கும்படி இளங்கோ ஆலோசனை சொல்லியிருந்தார்.அப்போதுதான் அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்க முடியும் என்பது அவர் திட்டம்.அதே போல் தான் நடந்தது.

“எனக்கு ஒன்றும் புரியவில்லை” என சொன்னார் இளங்கோ.”இதற்கு மேல் மனநிறைவு தரும் மருத்துவ பணியை நான் என் வாழ்வில் எங்கும் செய்ததில்லை.மனிதனாய் பிறந்த முழு பயனையும் இந்த 3 மாதத்தில் அனுபவித்து விட்டேன்.இந்த ஊரில் தான் எத்தனை வறுமை,என்ன கொடுமை” என சொன்னார்.

“உணமைதான்.எனக்கும் இந்த மதத்தை பற்றி இப்போது மோசமாக நினைக்க தோன்றவில்லை.என் மனைவி மட்டும் திரும்ப கிடைத்தால் சாகும் வரை இதே மருத்துவமனையில் தங்கியிருந்து மக்கள் பணி செய்வேன்” என்றான் சந்துரு.

“அட பாவிகளா.என் நிலைமை என்ன?” என கோபத்துடன் சொன்னார் அரவிந்சாமி.”நான் தான் ஏதோ தப்பு கணக்கு போட்டு ஏமாந்துவிட்டேன் போலிருக்கிறது.என் மற்ற நண்பர்களிடமிருந்து வரும் தகவலின்படி அனைவரும் இதே போல் மக்கள் பணி தான் செய்கிறார்களாம்.நான் ஏதோ என்னை தலைமை பிட்சுவாக்குவார்கள் என கணக்கு போட்டால் இப்படி ஆயம்மா வேலை பார்க்க வைத்துவிட்டார்களே” என்றார்.

“இன்னும் எத்தனை மாதம் இப்படி வேலை செய்வது?நாம் வந்த வேலை என்ன ஆவது?” என்றான் சந்துரு.

“என்ன செய்ய சொல்கிறாய்” என கேட்டார் அரவிந்சாமி. “என் மனைவியை தேட வேண்டும்.எப்படியாவது இந்த மதத்தின் பெரும்புள்ளி ஒருவரை கடத்தி வந்து நாலு மிதி வைத்தால் என் மனைவி இருக்குமிடத்தை சொல்லிவிடுவார்” என்றான் சந்துரு.

“முழு கதையும் கெட்டுவிடும்.இது இந்தியா என நினைத்தாயா?இங்கு கார்,வேன் எதுவும் கிடையாது.சைக்கிளில் தான் கடத்த முடியும்.மேலும் தினமும் சாயந்திரம் நாம் இங்குள்ள மடத்துக்கு போக வேண்டும் என்பதை கவனித்தாயா?ஒரு நாள் போகவில்லை என்றாலும் செய்தி மேலிடத்துக்கு போய்விடலாம்.” என்றார் அரவிந்சாமி.

“நம் இருவருக்கும் காய்ச்சல் வந்து உடம்பு சரியில்லை என்றால் மடத்துக்கு போக வேண்டியதில்லை அல்லவா” என்றான் சந்துரு.

“நீ அப்படி வருகிறாயா?சரி.ஆனால் கடத்த வாகனம் வேண்டுமே” என்றார் பிட்சு. “நீங்கள் தான் சொல்லி விட்டீர்களே.சைக்கிளில் கடத்தலாம் என்று.அதே போல் செய்வோம்” என்றான் சந்துரு.

 –

அன்று இரவில் யாங்யாங் நோக்கி இரு சைக்கிள்கள் விரைந்தன.100 மைல் தூரம் தான்.பதுங்கி பதுங்கி இரவில் தான் போக முடியும்.அடுத்த அத்யாயம் துவங்குவதற்குள் போய் சேர்ந்து விடுவார்கள் என நம்பலாம் (அவர்கள் யாங்யாங் போய் சேர்ந்தபின்…….தொடரும்)

ஆகஸ்ட் 26, 2007

அஞ்சேல் எனாத ஆண்மை-5

Filed under: novel — Selvan @ 8:44 பிற்பகல்

“யார் இவர்கள்?” என கேட்டார் ஒரு பிட்சு.

“தெரியவில்லை.இங்கே நடந்த கொலைகளை உடனே ஆலயத்துக்கு தெரிவிக்க வேண்டும்.இவர்களை என்ன செய்வது என்று கேட்கவேண்டும்” என்றார் இன்னொரு பிட்சு.

“அவசியமே இல்லை” என்று இன்னொரு குரல் கேட்டது. நான்கு பிட்சுகளும் திரும்பி பார்த்தனர்.

வாயிலருகே நம் பழைய நண்பரான மும்பை பிட்சு நின்றிருந்தார்.அவரை நால்வருக்கும் அடையாளம் தெரிந்தது. “நீங்களா?உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லையே?” என கேட்டார் ஒரு பிட்சு.

 ”இனி தான் ஏதாவது ஆகணும்” என்றார் மும்பை பிட்சு. கலாஷ்னிகோவை எடுத்தார். சுட்டார். நால்வரும் அடுத்த வினாடி கீழே விழுந்து உயிர் இழந்தனர்.

 பிட்சு அதன்பின் விரைந்து செயல்பட்டார்.தண்னீர் ஜக்கை எடுத்து இளங்கோ,சந்துரு மீது தெளித்து எழுப்பினார்.

 ”எதற்கு எங்களை காப்பாற்றினாய்?” என கேட்டான் மயக்கம் தெளிந்து எழுந்த சந்துரு.

“அதுவா முக்கியம்?போய் சேட்டு மகளை கூட்டி வாருங்கள்.அவரை தவிர மற்றவர்களை ஒன்றும் செய்யாதீர்கள்” என்றார் பிட்சு.

அறை அறையாக தேடினர் இளங்கோவும் சந்துருவும்.ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த கொரியா போகவேண்டிய கும்பலை கண்டுபிடித்தனர். சேட்டு மகளை மட்டும் நைசாக பேசி வெளியே கூட்டி வந்தனர். அப்பாவும்,அண்ணனும் செத்த செய்தியை தெரிவித்தனர்.மீராவின் முகத்தில் எந்த சலனமும் இல்லை.

“அம்மாவும்,அப்பாவும் குருதேவர்தான்.அவும் ஷென்ரிக்கியோ.” என்றாள் மீரா.

“பேச நேரமுமில்லை.பொறுமையும் இல்லை.வேலை ஏராளமாக இருக்கிறது” என்றான் சந்துரு.இருவரும் சேர்ந்து மீராவை கட்டி இன்னொரு அறையில் அடைத்தனர்.

——-

 ”அப்படி என்னப்பா தலை போகும் வேலை?” என்று கேட்டார் பிட்சு.

“நீ முதலில் எங்களை எதற்கு காப்பாற்றினாய் என்பதை சொல்” என்றார் இளங்கோ.

“நீங்கள் இனி என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை சொன்னால் நான் அதை பொறுத்து சொல்லலாமா வேண்டாமா என யோசிப்பேன்” என்றார் பிட்சு.

“சேட்டு மகளை காப்பாற்றிவிட்டோம்.எங்கள் மனைவி,மகள் என்ன ஆனர்கள் என தெரியவில்லை.அவர்களை பார்க்கும் நம்பிக்கையும் இல்லை.இனி போலிஸில் சரணடைவதுதான் திட்டம்” என்றார் இளங்கோ.

“அட முட்டாள்களா” என்றார் பிட்சு.”உன் மனைவி இருக்குமிடம் போக அருமையான் சந்தர்ப்பம் வந்திருக்கு.நாளை காலை விமானம் வரும்.அதில் ஏறினால் வடகொரியா போய்விடலாம்.அங்கு தான் உன் மனைவியும் அவர் மகளும் இருக்கிறார்கள்” என்றார்.

“எனக்கு புரியலை” என்றான் சந்துரு.”எப்படி என்னை விமானத்தில் ஏற்றூவார்கள்?”

“எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருக்க முடியாது.நீங்கள் இருவரும் இங்கே உட்காருங்கள்.மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றார் பிட்சு.

 —

அதன்பின் புயல் வேகத்தில் காரியங்கள் நடந்தன.திடு திடுவென நிறைய புது பிட்சுகள் வந்தனர்.அனைத்து பிணங்களும் சேர்க்கப்பட்டு ஒரு அறையில் குவிக்கப்பட்டன.கொரியா போக தயாராக இருந்தவர்கள் கட்டி வைக்கப்பட்டு ஒரு வேனில் ஏற்றி செல்லப்பட்டனர்.அவர்களுக்கு பதில் புதிதாக சில நபர்கள் அந்த அறைக்குள் சென்றனர்.

சந்ருவுக்கும்,இளங்கோவுக்கும் தலை மொட்டை அடிக்கப்பட்டது.பிட்சு உடை அணிவித்து அந்த அறையில் உட்கார வைக்கப்பட்டனர்.நம் பிட்சுவும் அந்த அறையில் வந்து அமர்ந்து கொண்டார்.

காலையில் கொரிய விமானம் வந்தது.பைலட்கள் கோயிலில் ரெஸ்ட் எடுத்தனர் .புதிதாக 20 பிட்சுகள் கோயிலில் பொறுப்பேற்றிருந்தனர். பைலட்களால் ஒரு வித்யாசத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை.மாலையில் அனைவரையும் ஏற்றிக்கொண்டு டார்ஜிலிங் நோக்கி விமானம் கிளம்பியது.

 —

அன்றிரவு காட்டிலிருந்து ஒரு பெரும் கும்பல் ஆய்தங்களுடன் வந்து கோயிலை சூழ்ந்தது.கோயிலுக்கு தீ வைத்தது.சாவகாசமாக அதன்பின் மீண்டும் காட்டுக்குள் சென்றது.கோயில் உள்ளே இருந்த 20 பிணங்கள் சாம்பலாயின.

 ”நீங்கள் எல்லாரும் யார்?” என ஆயிரமாவது முறை கேட்டான் சந்துரு.

“மர்மப்புன்னகை பூத்தார் பிட்சு.

முகத்தில் குத்தலாம் போல் வந்த கோபத்தை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டான் சந்துரு.

டார்ஜிலிங் சென்ற விமானம் அங்கே அவர்களை தரை இறக்கியது. அங்கிருந்து பஸ்ஸில் ஏறி நேபாள எல்லை தாண்டினர்.அங்கே மீண்டும் ஒரு விமானம் அவர்களை ஏற்றிக்கொண்டது.

விமானத்தில் நன்றாக தூங்கினான் சந்துரு.எழுந்தபோது பிட்சு அவனை பார்த்து சிரித்தார்.”வடகொரியாவுக்கு வருக” என்றார்.”இன்னும் சற்று நேரத்தில் கோயிலுக்கு போய் விடுவோம்.அதிர்ஷ்டம் இருந்தால் உன் மனைவியை பார்க்கலாம்” என்றார் பிட்சு.

“யார் நீ?” என மீண்டும் கேட்டான் சந்துரு. “

“அதை கண்டுபிடிக்கத்தானே பிட்சு ஆயிருக்கிறேன்.அவும் ஷென்ரிக்கியோ” என்றார் பிட்சு.

“உன்னை கட்டிப்போட்டிருந்தபோதே கொன்றிருக்க வேண்டும்” என்றான் சந்துரு.

“இன்னும் சற்றுநேரத்தில் விமானம் கீழே இறங்கிவிடும்.அதன்பின் சாவகாசமாக கொலை செய்து கொள்” என்றார் பிட்சு

(தொடரும்)

பழைய இடுகைகள் »

Theme: Banana Smoothie. வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Follow

Get every new post delivered to your Inbox.